2011-10-18 14:54:18

புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழாவுக்குப் போட்டியாக, அகில உலகத் திரைப்பட விழா


அக்.18,2011. அன்பு, அமைதி, நல்லுறவு இவற்றை வளர்க்கும் சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்குப் போட்டியாக, கோவா மாநில அரசு சரியான விழுமியங்களைப் பறை சாற்றத் தவறும் திரைப்பட விழாவை நடத்த முனைவது வருத்தத்திற்குரியது என்று கோவாவின் அருள்தந்தை ஒருவர் கூறினார்.
கோவாவில் மிகவும் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படும். இவ்விழாவையொட்டி, நவம்பர் 24 முதல் நவநாள் பக்தி முயற்சிகள் துவக்கப்பட உள்ளன. இச்சூழலில், நவம்பர் 22 முதல் டிசம்பர் 2 வரை கோவாவில் அகில உலகத் திரைப்பட விழாவை நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மனித குலத்தை மேம்படுத்தும் பல நல்ல விழுமியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சமயத் திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில், திரைப்பட விழாவொன்றை மாநில அரசு நடத்த இருப்பது நம்மிடையே பரவி வரும் உலகப் போக்கை உறுதிப்படுத்தும் ஓர் ஆபத்தான போக்கு என்று புனித சேவியர் கோவிலின் அதிபரான இயேசு சபை குரு Savio Barreto கூறினார்.
2004ம் ஆண்டு வரை இந்தியாவில் அகில உலகத் திரைப்பட விழா புது டில்லியில் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. 2005ம் ஆண்டு இவ்விழா கோவாவிற்கு மாற்றப்பட்டது முதல் நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
புனித சேவியர் விழாவுடன் போட்டிபோடும் வண்ணம் அமைந்துள்ள இந்த விழாவை மாற்றும்படி தலத் திருச்சபை அரசுக்கு 2006ம் ஆண்டு முதல் விண்ணப்பங்கள் செய்துள்ளபோதிலும் இதுவரை எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை என்பதை அருள்தந்தை Barreto தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.