2011-10-18 14:49:32

எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களுக்கு கர்தினால் Antonios Naguibன் சுற்றறிக்கை


அக்.18,2011. எகிப்து நாட்டின் கண்ணியமான, நேர்மையான குடிமக்களை இழந்து தவிக்கும் நாங்கள், புண்பட்ட மனதுடன் எங்கள் வேதனையை எடுத்துக் கூறுகிறோம் என்று அலெக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஓர் அமைதியான போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததையொட்டி, தன் வருத்தங்களைத் தெரிவித்து கர்தினால் Naguib அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாட்டின் குடியரசை உறுதி செய்யும் ஆவலில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பிய காப்டிக் கத்தோலிக்கர்கள் வன்முறைக்கு பலியானதற்கு தன் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார்.
இந்த வன்முறைக்கு அந்நாட்டு அரசே காரணம் என்ற கண்டனங்களை பல்வேறு அமைப்புக்கள் கூறியுள்ளபோது, கர்தினால் விடுத்துள்ள இவ்வறிக்கையில் தற்போதைய அரசின் மீது தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதோடு, அந்நாட்டில் மக்களாட்சி நிறுவப்படுவதற்கு கத்தோலிக்கர்கள் தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் எகிப்தில் நிகழவிருக்கும் பொதுத்தேர்தலில் காப்டிக் கத்தோலிக்கர்கள் முழுமையாகவும், ஆர்வமாகவும் பங்கெடுக்க வேண்டும் என்று அலெக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Naguib சிறப்பான வேண்டுகோளை இவ்வறிக்கையில் விடுத்துள்ளார்.
எகிப்தில் தற்போது 250,000 காப்டிக் கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.