2011-10-18 14:48:06

உலக அமைதிக்கான பல்சமய செப வழிபாடு குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்


அக்.18,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அசிசியில் 1986ல் நடத்திய அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தின் 25ம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாகவும், உலக அமைதிக்காகவும் இம்மாதம் 27ம் தேதி அசிசியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் இடம்பெறும் பல்சமய செப வழிபாடு குறித்த முழு விவரங்களை திருப்பீட அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.
உலகின் அமைதி மற்றும் நீதி குறித்து சிந்திக்கும், கலந்துரையாடும் மற்றும் செபிக்கும் நாளாக இது இருக்கும் என்று கூறிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இந்நாள் கொண்டாட்டங்களில் பல்வேறு மதப்பிரதிநிதிகளுடன், நல்மனம் கொண்டோரும் சமய நம்பிக்கை இல்லாதவர்களும் பங்கு பெறுவார்கள் என்றார்.
நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் துன்புறும் இன்றைய உலகில் 'உண்மையின் திருப்பயணம் அமைதியின் திருப்பயணம்' என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்த உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டம், மதங்களிடையே உருவாகும் வன்முறைகள் மதத்திற்கு களங்கம் விளைவிப்பதாகவும் மதத்தின் உண்மை தனித்துவத்திற்கு எதிராகச் செல்வதாகவும் உள்ளன என்பதை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கும் என்றார் கர்தினால் டர்க்சன்.
இந்த அசிசிக் கூட்டத்திற்கு முன்னோடியாக, இம்மாதம் 26ம் தேதி புதனன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் காலை 10.30 மணிக்கு திருத்தந்தையின் பொது மறைபோதகத்திற்குப் பதிலாக வார்த்தை வழிபாடு நடைபெறும் எனவும் கர்தினால் டர்க்சன் அறிவித்தார்.
இம்மாதம் 27ம் தேதி உரோம் நகரிலிருந்து அசிசி நோக்கி பல்சமய பிரதிநிதிகளைச் சுமந்து செல்லும் சிறப்பு இரயில், தெர்னி, ஸ்பொலெத்தோ மற்றும் ஃபொலிஞ்ஞோ நகர்களில் நின்று அந்நகர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் திருச்சபையின் ஒருமைப்பாட்டை அறிவித்துச் செல்லும் எனவும் கூறினார் கர்தினால்.
எகிப்து, இஸ்ரேயல், பாகிஸ்தான், ஜோர்தான், ஈரான், இந்தியா, சவுதி அரேபியா, பிலிப்பீன்ஸ் உட்பட உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் உலக அமைதிக்கான இச்செபக்கூட்டத்தின்போது, அமைதிக்கான தேடலில் அப்பாதையை மனிதருக்கு ஒளிர்விக்கும் அடையாளமாக ஒவ்வொரு பிரதிநிதிகிகும் சிறு விளக்கு ஒன் று வழங்கப்படும் எனவும் அறிவித்தார் கர்தினால் டர்க்சன்.
இக்கூட்டத்தில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், லூத்தரன், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் பிரமுகர்கள், Constantinople முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ, சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் பேராயர், மாஸ்கோ முதுபெரும் தலைவருக்கு நெருக்கமானவர், இன்னும், யூதம், இசுலாம், இந்து, புத்தம், இயற்கையை வழிபடுவோர் என சுமார் 100 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.