2011-10-18 14:52:59

உரோம் நகரில் நடைபெற்ற கலவரங்களில் கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டதற்கு வத்திக்கான் கண்டனம்


அக்.18,2011. கடந்த வார இறுதியில் உரோம் நகரில் நடைபெற்ற கலவரங்களில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை உரோம் நகரில் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயம் அமைந்துள்ள சதுக்கத்தில் கலவரங்கள் நடைபெற்றன. இக்கலவரங்களின்போது, அச்சதுக்கத்திற்கு அருகே உள்ள புனிதர்கள் மார்செல்லினோ மற்றும் பீட்டர் ஆலயம் தாக்கப்பட்டது.
இக்கோவிலின் முன் கதவு உடைக்கப்பட்டதென்றும், கோவிலின் வாசலில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருஉருவம் அகற்றப்பட்டு, தெருவில் உடைக்கப்பட்டதென்றும் இக்கோவிலின் பங்கு குரு அருள்தந்தை Giuseppe Ciucci இத்தாலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இத்தாலிய அரசுக்கும், பிரதமர் Silvio Berlusconiக்கும் எதிராக எழுந்த இந்த கலவரங்களில் பல வங்கிகள், கடைகள், மற்றும் வாகனங்கள் பெரும் சேதமடைந்தன.







All the contents on this site are copyrighted ©.