2011-10-18 15:26:40

அக்டோபர் 19, வாழ்ந்தவர் வழியில்... சுப்பிரமணியன் சந்திரசேகர்


சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியாவில் 1910ம் வருடம் அக்டோபர் 19ம் நாள் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய வானவியல் இயற்பியலாளர். சுப்பிரமணியன், சீதாலட்சுமி ஆகியோருக்கு பிறந்த சந்திரசேகர், 1928ம் ஆண்டு நொபெல் விருது பெற்ற சர்.சி.வி. இராமனுடைய மருமகன். சென்னையில் மாநிலக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிப்பை இவர் மேற்கொண்டபோது வெள்ளைக் குட்டி விண்மீன்கள் பற்றிய இரால்ஃப் ஃபவுலர் என்பவரின் ஆராய்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, தன் 18வது வயதிலேயே ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயாரித்து ஃபவுலருக்கு அனுப்பினார். இக்கட்டுரை இவரை இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு இட்டுச் சென்றது. இருபது வயதில் ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராக அங்கு சேர்ந்த சந்திரசேகர், மூன்றே ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெற்றார். 1937லிருந்து 1995ம் ஆண்டு வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இங்கிலாந்திலுமாக வாழ்நாள் முழுவதும் விண் மீன்களின் கட்டமைப்பு, வெள்ளைக் குட்டி விண்மீன், குவாண்டம் இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவருக்கும் வில்லியம் ஆல்ஃப்ரெட் ஃபவுலர் என்பவருக்கும் 1983ம் ஆண்டு விண்மீன்களின் கட்டமைப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக நொபெல் பரிசு வழங்கப்பட்டது. சந்திரசேகர் ஏராளமான அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். பல சர்வதேச விருதுகளும் சந்திரசேகரைத் தேடி வந்தன. அவர் ஓர் ஆர்வம் மிகுந்த ஆசிரியர். உலகெங்கும் அவரது வகுப்புகளை விரும்பி ஏற்ற மாணவர்கள் இருந்தனர். 1983ல் அவர் வெளியிட்ட 'கருந்துளை விண்மீன்களின் கணிதவியல் கோட்பாடு' என்ற நூல் புகழ்பெற்றது. உலக அளவில் முக்கியமான வானவியல் இயற்பியலாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட சந்திரசேகர் 1995 ஆகஸ்டு 21ம் நாள் மறைந்தார்.








All the contents on this site are copyrighted ©.