2011-10-15 14:54:52

அக்டோபர் 16, வாழ்ந்தவர் வழியில்... வீரபாண்டிய கட்டபொம்மன்


பாஞ்சாலங்குறிச்சியையும், கயத்தாறையும் உலக வரைப்படத்தில் நிரந்தரமாகப் பதித்த பெருமைக்குரியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 'வீரம் மிகுந்தவர்' என்ற பொருள்படும் 'கெட்டி பொம்மு' என்ற தெலுங்கு வார்த்தைகள் ‘கட்டபொம்மன்’ என்று நாளடைவில் மாறின. இந்த வீரப்பரம்பரையில் 1760ம் ஆண்டு சனவரி 3ம் நாள் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
தனது 30வது வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்ற வீரபாண்டியன், ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளுடன் அடிக்கடி மோத வேண்டியிருந்தது. இந்த நிறுவனம் விதித்திருந்த வரியைக் கட்ட மறுத்ததால், இந்த மோதல்கள் முற்றுகைகளாக, சண்டைகளாக உருவெடுத்தன. இவற்றில் கட்டபொம்மன் படையும், ஆங்கிலேய நிறுவனமும் மாறி மாறி வெற்றி பெற்றன.
1799ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 1799ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.