2011-10-14 16:15:06

மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், தலத்திருச்சபை வலியுறுத்தல்


அக்.14,2011. மியான்மாரில் இவ்வாரத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள அதேவேளை, அந்நாடு மேலும் அதிகமான குடியரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக மியான்மார் தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.
இராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் மியான்மார் அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray இவ்வாறு கூறினார்.
தற்போது சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அரசின் நல்ல மாற்றத்தைக் காட்டினாலும், எஞ்சியுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு உண்மையான விருப்பம் தேவைப்படுகின்றது என்று ஆயர் Po Ray மேலும் கூறினார்.
தற்போது விடுவிக்கப்ப்டடுள்ள 6,359 கைதிகளில் 220 பேரே அரசியல் கைதிகள் எனவும், இன்னும் சுமார் இரண்டாயிரம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் எனவும் மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
மேலும், மியான்மார் அரசின் தற்போதைய மன்னிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், அந்நாட்டின் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.