2011-10-13 15:45:10

திருத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, கத்தோலிக்க மக்கள் அளித்திருக்கும் நிதித்தொகை 6 கோடி யூரோக்கள்


அக்.13,2011. சோமாலியா, மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பசிக் கொடுமையைக் குறிப்பிட்டு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை அடுத்து, கத்தோலிக்க உலகம் தாராளமாக உதவிகள் செய்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி என்று Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜார்ஜியோ பெர்ட்டின் கூறினார்.
திருத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, இதுவரை கத்தோலிக்க மக்கள் அளித்திருக்கும் நிதித் தொகை 6 கோடி யூரோக்கள், அதாவது, 400 கோடி ரூபாய் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவில் தற்போது நிலவும் இந்த நெருக்கடிப் பிரச்சனையையும் தாண்டி, அப்பகுதியில் நிரந்தரத் தீர்வுகள் காணும் விதமாக, பல்வேறு பாலர் பள்ளிகளை அமைக்க கிறிஸ்தவர்கள் முன் வர வேண்டும் என்று 'Cor Unum' என்ற திருப்பீட பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் ராபர்ட் சாரா விடுத்துள்ள அழைப்பையும் ஆயர் பெர்ட்டின் FIDES நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அவசரக்கால உதவிகள் செய்வது முக்கியம் என்றாலும், நீண்டகாலத் தீர்வுகளையும் காணும் வண்ணம் சோமாலியா போன்ற நாடுகளில் கல்வி அறிவு, நல வாழ்வு இவைகளை அமைக்கும் வழிகளைக் காண வேண்டும் என்று Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.