2011-10-13 15:44:53

திருத்தந்தை, ஹொண்டுராஸ் அரசுத் தலைவர் சந்திப்பு


அக்.13,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஹொண்டுராஸ் நாட்டு அரசுத் தலைவர் Porfirio Lobo Sosa ஐ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து 23 நிமிடங்கள் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத் தலைவர் Lobo Sosa.
இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், ஹொண்டுராஸ் நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக, நலவாழ்வு, கல்வி ஆகிய துறைகளில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் நற்பணிகளை அரசுத் தலைவர் லோபோ சோசா பாராட்டினார் என்றும் கூறியது.
அத்துடன், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, ஒப்புரவு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை ஊக்குவிப்பதில் தொடர்ந்து செயல்படுமாறு அரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்றும் திருப்பீட அறிக்கை கூறியது.
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ், சர்வதேச அளவில் கொண்டிருக்கும் நல்ல உறவுகளும் இச்சந்திப்புக்களில் பாராட்டப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.