2011-10-12 16:03:30

காசநோயாளர்களின் எண்ணிக்கை குறைகிறது


அக்.12,2011. காச நோயாளர்களின் எண்ணிக்கை முதல் தடவையாக குறைந்துள்ளது, மற்றும் காச நோயாளர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தில் இருந்து 88 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நோயால் உயிரிழக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் 14 இலட்சமாகக் குறைந்துள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். கடந்த 2003ம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தனர்.
இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று கூறியுள்ள ஐநாவின் பொதுச் செயலர் பான் கி மூன், இன்னும் அதிக மக்கள் இந்நோயினால் உயிரிழக்கும் நிலையில், மேலும் நிதியுதவி தேவை என்று உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிலும், பிரேஸில் நாட்டிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே இந்த எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. சீனாவில் காச நோய் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் 80 விழுக்காடு வீழச்சியடைந்துள்ளது.
எச்.ஐ.வி நோய் பெருக்கம் குறைவதாலும், காச நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உலக மக்கள் தொகையில் மூன்றுல் ஒரு பங்கினரை பாதிக்கக் கூடிய தன்மை படைத்த இந்த நோய் பரவல் குறைந்து வருவது முக்கிய மைல் கல் என்றாலும், காச நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துவிடக் கூடாது என்று உலக நலவாழ்வு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.