2011-10-12 16:02:00

எகிப்தில் பலியான காப்டிக் ரீதி கத்தொலிக்கர்களுடன் அகில உலகத் திருச்சபை ஒன்றித்துள்ளது - வத்திக்கான் அதிகாரி


அக்.12,2011. கடந்த ஞாயிறன்று எகிப்தில் அத்துமீறிய அடக்குமுறையால் பலியான காப்டிக் ரீதி கத்தொலிக்கர்களுடனும், அந்நாட்டில் வாழும் அனைத்து கத்தொலிக்கர்களுடனும் அகில உலகத் திருச்சபை ஒன்றித்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தங்கள் கோவில்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதையும், தங்கள் உரிமைகள் பலவகைகளில் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஓர் அமைதி ஊர்வலம், அத்துமீறிய வெறிச்செயல்களில் முடிவடைந்தது மிகவும் வேதனையை அளிக்கிறது என்று கீழை ரீதி சபைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
கடந்த ஞாயிறன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது இஸ்லாமிய அடிப்படை வாதிகளும், பின்னர் அந்நாட்டு இராணுவமும் மேற்கொண்ட வெறித் தாக்குதல்களில் இதுவரை 36 பேர் இறந்துள்ளனர் என்றும், 327 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அரசுத் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிகிறது.
இறந்தவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட மரண அறிக்கையில், அவர்களில் பலர் வாகனங்களுக்கு அடியே சிக்குண்டு இறந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இறந்தோரில் 17 பேருக்கு இச்செவ்வாய் மாலை கெய்ரோவின் பேராலயத்தில் அடக்கச் சடங்குகள் நடைபெற்றன என்று MISNA செய்தி குறிப்பொன்று கூறுகிறது.
தற்போது எகிப்தில் அரசுப் பொறுப்பில் உள்ள இராணுவ அவை இந்தத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் நடத்த தனிப்பட்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.