2011-10-11 15:56:30

அக்டோபர் 12வாழந்தவர் வழியில்...


1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர் ஜலாலுதீன் முகமது அக்பர். தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்த இவர், முகலாய மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறார்.
அக்பர் ஒரு சிறந்த போர் வீரர், கலைஞானி, பரந்த மனம் படைத்தவர். கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்றாகும். அக்பர் பல இலக்கியங்களை ஒருசேரத் தொகுப்பதற்கு வழிவகை செய்தார். கலை நுணுக்கங்களுடன் கூடிய, புகழ்பெற்ற பல கட்டிடங்களைக் கட்டுவித்தார்.
மதத்தொடர்பான வாதங்களை இந்து, முஸ்லிம் மற்றும் சீக்கிய அறிஞர்கள் மத்தியில் நடத்தினார் அக்பர். போர்த்துக்கலிலிருந்து வந்த இயேசுசபை குருக்களுடன் முஸ்லிம் மத அறிஞர்களை வாதம் செய்ய வைத்தார். பல மதங்களின் கொள்கைகளை உள்ளடக்கிய "தீன் இலாஹி" என்ற புதிய மதக்கொள்கையை உருவாக்கினார். "தீன் இலாஹி" என்றால், "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள்.
பல்வேறு துறைகளில் திறமை பெற்ற ஒன்பது பேரை அக்பர் தன் அரசவையில் முக்கியப் பொறுப்புக்களில் வைத்திருந்தார். இவர்களை ‘அக்பரின் நவரத்தினங்கள்’ என்று வரலாறு அழைக்கிறது. முகலாய மன்னர்களில் மிக உயர்வாகக் கருதப்படும் பேரரசர் அக்பர் 1605ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.