2011-10-10 14:18:53

வாரம் ஓர் அலசல் - மனித உயிர், உயர் மதிப்பீடு


அக்.10,2011. அவர் புகழ்மிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணர். அன்று அவர் பயணம் செய்த சொகுசு வாகனம் பழுதாகி விட்டது. எனவே பக்கத்து ஊரிலிருந்த பழுதுபார்ப்பவரை கைபேசியில் அழைத்தார். அவரும் உடனடியாக வந்து அந்த வாகனத்தைச் சரி செய்து கொடுத்தார். பின்னர் அதற்கான கூலிப்பணத்தையும் பெற்றுக் கொண்டார். அந்தப் பணத்தை வாங்கியபோது பழுதுபார்த்தவர் கேட்டார் : “ஐயா, நீங்களும் நானும் ஒரே வேலையைத்தான் செய்கிறோம். நாம் இருவருமே அறுவை சிகிச்சை நிபுணர்கள்தான். என்னைப் போன்றவர்கள் இயந்திரத்தின் பழுதினை நீக்கி பாகங்களை இணைத்து ஒட்ட வைக்கிறோம். நீங்கள் மனித இதயத்தில் அப்படிச் செய்கிறீர்கள். நாங்கள் செய்யும் தொழிலுக்கு ரூபாய்க் கணக்கில் கூலி வாங்குகிறோம். ஆனால் நீங்கள் மட்டும் ஏன் இலட்சக்கணக்கில் வாங்குகிறீர்கள்” என்று. அதற்கு அந்த மருத்துவ நிபுணர், “தம்பி!, வேலை என்னவோ ஒன்றுதான். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். நீ இயந்திரத்தை நிறுத்திவிட்டு வேலை செய்கிறாய். ஆனால் நான் அப்படிச் செய்ய முடியாது” என்று. ஆம். மனித உயிர் என்பது உயர் மதிப்பீடுதான்.
ஒவ்வொரு நாளும் தினத்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கொலைகள் இல்லாத செய்திகளைக் கேட்பது அரிது. இஞ்ஞாயிறு தினசரியில்கூட, 'இலங்கையில் மீண்டும் பிச்சைக்காரர்கள் கொலை', பீகார் மாநிலத்தில் மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றவர் கைது, தூத்துக்குடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவர் இரயிலில் அடிபட்டு பலி, திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், புத்தமதத் துறவிகள் இருவர் தீக்குளிப்பு – இப்படி கொலை, தற்கொலைகள் எனப் பல செய்திகள். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் போதைப் பொருள் மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம்(UNODC) கடந்த வியாழக்கிழமை (அக்.6,2011) வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி 2010ம் ஆண்டில் உலகில் 4 இலட்சத்து 68 ஆயிரம் மனிதக் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு மனிதன் சகமனிதனைக் கொலை செய்யும் கொடூரம் கடந்த ஆண்டில் ஆப்ரிக்காவில் சுமார் 36 விழுக்காடும் அமெரிக்காவில் 31 விழுக்காடும் ஆசியாவில் 27 விழுக்காடும் ஐரோப்பாவில் 5 விழுக்காடும் ஓசியானியாவில் ஒரு விழுக்காடும் இடம் பெற்றுள்ளன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தெற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவிலும் இளைஞர்கள் கொலை செய்யப்படும் ஆபத்து அதிகமாக இருக்கின்றது. இந்தக் கொலைகளில் 25 விழுக்காடு திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள், குறிப்பாக, போதைப்பொருள் வியாபாரிகளால் நடத்தப்படுகின்றன என்று ஐ.நா.கூறியது.
இந்தக் கொலைகளைத் தவிர்த்து அரசுகள் வழங்கும் மரணதண்டனை கொலைகள் 2009ம் ஆண்டில் மட்டும் சீனா தவிர பிற நாடுகளில் 718. சீனாவில் இவ்வெண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதில் ஆறுதல் தரும் செய்தி என்னவெனில், மரணதண்டனை வழங்கும் சட்டத்தை 1977ம் ஆண்டில் 16 நாடுகள் இரத்து செய்திருந்தவேளை, 2009ம் ஆண்டில் 139 நாடுகள் இதனைச் சட்டத்திலிருந்தும் நடைமுறையிலிருந்தும் அகற்றியிருந்தன. ஆயினும் இது இன்னும் 23 நாடுகளில் அமலில் உள்ளது. உலகில் இடம் பெறும் மரணதண்டனைகளில் 75 விழுக்காடு ஆசியாவில்தான் நடத்தப்படுகின்றன. 2008ம் ஆண்டில் சீனாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேருக்கும், 2010ம் ஆண்டில் பாகிஸ்தானில் 365 பேருக்கும் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
தண்டனை என்ற பெயரில் நடத்தப்படும் மனிதக் கொலைகள் வரலாற்றில் 3700 வருடங்களுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது. கிரேக்க தத்துவமேதை சாக்ரடீஸ், இளைஞர்கள் மனதை கெடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கி.மு.399ல் ஹெம்லோக் என்ற நஞ்சைத் தண்டனையாக ஏற்று கொண்டு மரணத்தைத் தழுவினார். பழங்காலத்தில் பலவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டதை விவிலியத்திலும் வாசிக்கிறோம். சிலுவையில் அறைவது, மரணம்வரை அடிப்பது, தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொல்வது, அம்பு ஈட்டியால் குத்திக் கொல்வது, கழுமரத்தில் ஏற்றுவது, பட்டினி கிடக்கும் சிங்கக் கூண்டில் போடுவது, எரியும் தீயில் தள்ளிக் கொலை செய்வது, கல் எறிந்து கொல்வது எனத் தண்டனை என்ற பெயரில் மக்களைப் பல வழிகளில் கொலை செய்துள்ளனர். இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர்தான். சவுதி அரேபியாவில் இத்தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்படுகின்றது. தமிழகத்தில் வைணவம், எட்டாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசு, விடுதலை வீரர்களைப் பயமுறுத்த தூக்குத் தண்டனையை ஆயுதமாகப் பயன்படுத்தியது. வீரபாண்டிய கட்டப்பொம்மன், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் எனப் பலர் தூக்குமேடை ஏறினார்கள். இரண்டாம் உலக போரில் ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததையோ அண்மையில் இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதையோ ஈரமுள்ள எந்த நெஞ்சினாலும் நினைத்துப் பார்க்க முடியாதது.
அகிம்சாவாதியான காந்திஜி பிறந்த இந்தியாவில், விடுதலைக்குப் பின்னர் நாட்டில் 55 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் 1953ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரையில் 16 மாநிலங்களில் 1422 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று The People's Union for democratic Right(PUDR) என்ற மனித உரிமை அமைப்பு கூறியது. மகாத்மா காந்தியின் கொலையாளி என்று சொல்லப்படும் நாதூராம் கோட்சே முதன் முதலாக 1949ல் தூக்கிலேற்றப்பட்டார். வேலூர் சிறையில் இருந்த ஆட்டோ சங்கருக்கு 1995ல் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று பேருக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வேளையில் இத்தண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், இல்லை அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குரல்கள் நேர்எதிராக ஒலித்து வருகின்றன. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை, எந்த நாட்டிலும் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது. மனித உயிரைக் கொடுத்தவர் இறைவன், எனவே அதனை எடுப்பதற்கு இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பது திருச்சபையின் போதனை. ஒரு குற்றவாளியின் உயிரை எடுப்பதால் நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? என்ற கேள்வியைத் திருச்சபை அதிகாரிகள் அடிக்கடி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 1991ம் ஆண்டில், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை, அவரது கணவர் வேலுச்சாமியும் மற்றும் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமியோ, தான்தான் தன் மனைவியைக் கொலை செய்ததாகவும், அந்தக் கொலையைச் செய்த விதம் குறித்தும், நீதிமன்றத்தில் நடித்தும் காட்டினார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்மணி, அந்த நீதிமன்றத்தில் நேரில் வருகை தந்து, தனது பெயர் பாண்டியம்மாள் என்றும், தன்னைக் கொலைசெய்து விட்டதாகத்தான் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் சாட்சியமளித்தார். அப்படியானால் கண்டெடுக்கப்பட்ட சடலம் யாருடையது? இன்று வரையிலும் இது விடைதெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது என்று ஊடகத்தில் வாசித்தோம். இதேபோல் இன்னும் சில செய்திகள் இருக்கின்றன. இந்நிலையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நீதிபதிகளால் இழந்த உயிரை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய முடியுமா?
எனினும் அன்பர்களே, எல்லா வழக்குகளுமே இதே பாணியில்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆயினும் இந்த மரணதண்டனை குறித்து இந்தியாவின முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொன்னார் :
“எனக்கு நன்றாகத் தெரியும். தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்காக எனது இதயத்தில் இப்பொழுதும் குருதி வழிகிறது”
என்று. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும்,
“மரணதண்டனை மனித வாழ்வில் சில பக்கங்களைக் கிழித்து எறிந்து விடுகிறது. விலை மலிந்த பக்கங்களுக்குப் பதிலாக, திருத்தப்பட்ட புதிய பதிப்பு வெளிவராமல் செய்து விடுகின்றது”
என்று சொல்லியுள்ளார். இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் நிச்சயம் என்ற உண்மை தெரிந்திருந்தும் ஒரு மனிதனின் மரணத்தை ஒரு சமூகம் தன் சட்டம் கொண்டு திட்டமிட்டு நிகழ்த்துவது ஏற்று கொள்ள இயலாத கசக்கும் உண்மையாகும்! மரண தண்டனையானது ஒரு கொடூரமான தண்டனைமுறை என்பது மட்டுமல்ல, அத்தண்டனையால் கொல்லப்பட்ட உயிரை எந்த வடிவத்திலும் திரும்பப் பெறவே முடியாத ஒரு தண்டனையாகும். பொதுவாக, குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையின் நோக்கம், அவரைச் சீர்திருத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இம்மாதிரியான அறைகூவல்களுடன் அக்டோபர் 10ம் தேதியான இத்திங்கள்கிழமை மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் கடைபிடிக்கப்பட்டது. இதே நாளில் உலக மனநல நாளும் சிறப்பிக்கப்பட்டது. நலமான மனத்தில்தான் ஆக்கப்பூர்வமானச் சிந்தனைகள் பிறக்கும். நோயினால் பாதிக்கப்பட்ட மனத்திடமிருந்து சீர்மிகுச் சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. மனிதமிக்க மனமே மனித உயிரின் விலையை உணரும்.
மூடியிருக்கும் கதவை கடவுள் தட்டிக் கொண்டே இருப்பது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் ஓவியம் ஒன்றை வரைந்தார் ஓவியர் ஹெல்மன். அதைப் பார்த்தவர் எல்லாரும் பரவசமடைந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் குறை சொன்னார். ஓவியத்தின் கதவில் சாவித்துவாரம் இல்லையே, சாவியில்லாமல் எப்படிக் கதவைத் திறப்பது என்று. அதற்கு ஹெல்மன் புன்னகையுடன் பதில் சொன்னார் – தம்பி, சாவித் தூவாரமும் சாவியும் வெளியில் இல்லை. உள்ளேதான் இருக்கிறது. உள்ளே இருக்கும் நீதான் கதவைத் திறக்க வேண்டும் என்று. பின்னர் அந்த ஓவியத்தைப் பார்த்த மற்றவர்களிடம் ஹெல்மன் விளக்கினார் – தரிசனம் கதவைத் தான் தட்டும். தரிசனம் பெற வேணடியது நீர் தாம் என்று.
ஒரு முட்டை வெளிச் சக்தியிலிருந்து உடைபட்டால் அதன் வாழ்வு முடிந்து விடும். மாறாக, அது உள்ளேயே உடைபட்டால் அதற்கு வாழ்வு தொடங்கும். ஆம். மகத்தான காரியங்கள் ஒருவருக்கு உள்ளேயிருந்து தொடங்குகின்றன. ஒருவர் தனது மனத்தை நல்ல விதமாக வைத்துக் கொள்வது வெளியே இல்லை. அக்கம்பக்கத்தில் இல்லை. ஆனால் அது அவருக்கு உள்ளேயே அவரது மனதிலே இருக்கிறது.
எனவே மனதை நலமாக வைத்து மனித உயிர்களைக் காப்பாற்றுவோம். மனித நலம் பேணுவோம்.








All the contents on this site are copyrighted ©.