2011-10-10 15:23:26

திருத்தந்தை – நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை


அக்.10,2011. தென் இத்தாலியின் Lamezia Terme விசுவாசிகள் தங்களது கடும் சமுதாயப் பிரச்சனைகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிக்குமாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடும் வேலைவாய்ப்பின்மையும் பெருமளவாகக் குற்றங்களும் இடம் பெறும் இத்தாலியின் மிக ஏழைப் பகுதியான கலாபிரியாப் பகுதிக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியிலுள்ள பல அன்னைமரியா திருத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு அம்மக்களின் பாரம்பரிய மாதா பக்தியையும் பாராட்டினார்.
பொதுநலனைக் கட்டி எழுப்புவதில் விசுவாசிகள், தலஆயர்களுடன் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
மேலும், கலாபிரியாவிலுள்ள கர்த்தூசியன் துறவு இல்லத்திற்கு ஞாயிறு மாலை சென்று உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்துச் சமூகத்தில் அமைதி இல்லாமல் இருப்பது, பலரை மிகவும் பதட்டநிலைக்கு உள்ளாக்குகின்றது என்று கூறினார்.
இப்பகுதியின் பல இளையோர், சமுதாயத்தில் காணப்படும் வெறுமையை எதிர்கொள்ளப் பயந்து, வெறுமையாக உணரும் நேரங்களை இசையிலும் வேறு பல பொழுதுபோக்கிலும் செலவிடுகிறார்கள் என்றார் அவர்.
அமைதியிலும் தனிமையிலும் நேரத்தைச் செலவிடுவது இறைப்பிரசன்னத்தை உணர உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தத் துறவு மடம், 900த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானியரும் கர்த்தூசியன் துறவு சபையைத் தொடங்கியவருமான புனித புருனோவால் உருவாக்கப்ட்டது.
இத்துறவு மடம் அமைந்திருக்கும் Serra San Bruno என்ற ஊருக்கு இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை சென்றபோது முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றனர்.








All the contents on this site are copyrighted ©.