2011-10-08 14:24:41

அக்டோபர் 09, வாழ்ந்தவர் வழியில்... சே கெவாரா


பல இளையோரின் மார்புக்கவசம் போல் அவர்கள் அணிந்திருக்கும் மேலாடைகளில் கம்பீரமாகத் தோன்றும் ஒரு புரட்சியாளர் சே கெவாரா (Che Guevara). தனது 39வது வயதில் கொல்லப்பட்ட இவர், சமுதாயப் புரட்சிகளில் ஈடுபடும் பலரது கொள்கை நாயகனாக இன்றும் திகழ்கிறார்.
அர்ஜென்டினா நாட்டில், ரொசாரியோ எனுமிடத்தில் 1928ம் ஆண்டு ஜூன் 14ம் நாள் பிறந்தவர் எர்னஸ்டோ சே கெவாரா. தனது 20வது வயதில் Buenos Aires பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், தன் கல்லூரி வாழ்க்கையின்போது இருமுறை தென் அமெரிக்காவின் பல நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டார். அந்நாடுகளில் நிலவிவந்த வறுமை, அடக்குமுறை ஆகியவைகளைக் கண்டு சே கெவாரா பெரிதும் பாதிக்கப்பட்டார்.
பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் தன்னை இவர் இணைத்துக் கொண்டார். இவ்வியக்கம் 1956ம் ஆண்டு கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை வகித்தார் சே கெவாரா. கொரில்லாப் போர்முறை பற்றிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் இவர் எழுதினார்.
பொலிவியா நாட்டின் சமுதாயப் புரட்சியில் பங்கேற்பதற்காக 1965ம் ஆண்டு இவர் கியூபாவில் இருந்து வெளியேறினார். பொலிவியாவில் சி.ஐ.ஏ. மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சரியான வழக்கு விசாரணை ஏதுமின்றி, 1967ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
கால்களில் குண்டடிபட்டதால் எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்த சே கெவாரா, தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்து, ‘ஒரு நிமிடம் பொறு, நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னை சுடு’ என்று சொல்லி, தன் மரணத்தை எழுந்து நின்று வரவேற்றார் என்று சொல்லப்படுகிறது. 20ம் நூற்றாண்டு வரலாற்றில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் என்று Time வார இதழ் பட்டியலிட்ட 100 மனிதர்களில் சே கெவாராவும் ஒருவர்.








All the contents on this site are copyrighted ©.