2011-10-07 15:39:15

அக் 08, 2011. வாழ்ந்தவர் வழியில் .... வில்லி பிராண்ட்


ஹெபர்ட் ஏர்ன்ஸ்ட் கார்ல் ஃப்ராம் (Herbert Ernst Karl Frahm) என்ற இயற்பெயர் கொண்ட ஜெர்மன் அரசியல்வாதி, 1913ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பிறந்தார். நாத்ஸி கொள்கைகளை எதிர்த்ததனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். ஜெர்மன் அரசும் அவரின் குடியுரிமையைப் பறித்துக்கொண்டது. இஸ்பெயின், நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் பணியாற்றிய இவர், நாத்ஸி படைகளிடமிருந்து தப்பிப்பதற்காக தன் பெயரை வில்லி பிராண்ட் (Willy Brandt) என மாற்றினார். நார்வே நாடு இவருக்கு குடியுரிமை வழங்கியது. 1946ம் ஆண்டு ஜெர்மனி திரும்பிய இவர், வில்லி ப்ராண்ட் என்ற பெயரை சட்டபூர்வமாகப் பதிவுச் செய்தார். இரண்டே ஆண்டுகளில் தன் ஜெர்மன் குடியுரிமையையும் திரும்பப் பெற்றார். 1957ல் மேற்கு பெர்லின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மன் அதிபர் தேர்தலில் இருமுறை போட்டியிட்டு தோல்வி கண்டாலும், 1969ம் ஆண்டில் கூட்டாட்சி கொள்கையின் அடிப்படையில் சில கட்சிகள் ஒன்றிணைந்து இவரை அதிபராகத் தேர்வு செய்தன. ஜெர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையிலும் உள்விவகாரங்களிலும் பல்வேறு நல்ல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது இவரின் ஆட்சி. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தார் வில்லி பிராண்ட். இரு ஜெர்மன் நாடுகளும் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என அனைத்து முயற்சிகளும் தீவிரமாகத் துவக்கப்பட்டது இவர் காலத்தில் தான். 1970ல் TIME பத்திரிகை இவரை அந்த ஆண்டின் தலைசிறந்த மனிதர் என அறிவித்தது. 1971ல் அமைதிக்கான நொபெல் விருதையும் பெற்றார் இவர். இருமுறை அதிபராக இருந்த இவர், கிழக்கு ஜெர்மனி, இரஷ்யா, போலந்து, செக்கஸ்லோவாக்கியா மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் உறவை மேம்படுத்தியதுடன், உள்நாட்டில் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெருமளவில் அதிகரித்தார். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மும்மடங்கு ஆக்கியதுடன், அரசால் செலவழிக்கப்படும் தொகையில் மூன்றில் ஒரு பகுதி, மக்கள் நலவாழ்வுத் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும்படி பார்த்துக் கொண்டார். தன் அந்தரங்க ஆலோசகர் ஒருவர் கிழக்கு ஜெர்மனிக்கான ஒற்றராகச் செயல்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, குற்றம் இவர் மீது இல்லையெனினும், அதற்கென தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார். ஆட்சி அதிகாரத்தில் இல்லையெனினும் கட்சி பணியிலும் மக்கள் பணியிலும் அதிக ஆர்வம் கொண்டு உழைத்தார். 1990ம் ஆண்டு, ஈராக் நாடு குவைத்தை ஆக்ரமித்தபோது சிறைபிடிக்கப்பட்ட மேற்கத்திய நாட்டவர்களை ஈராக்கிலிருந்து விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி 174 பேரின் விடுதலையையும் பெற்றுத் தந்தார். தன் வாழ்நாள் கனவான இரு ஜெர்மனிகளின் இணைப்பிற்கு பின் 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி காலமானார் வில்லி பிராண்ட்.








All the contents on this site are copyrighted ©.