2011-10-06 14:35:33

தலித் குழந்தைகளின் நல் வாழ்வுக்கு நிதி திரட்டும் ஆஸ்திரேலியப் பெண்ணின் 1000 கிலோமீட்டர் நடைபயணம்


அக்.06,2011. இந்தியாவில் வாழும் தலித் குழந்தைகளின் நல் வாழ்வுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான ஒரு நடைபயணத்தை இப்புதனன்று ஆரம்பித்தார்.
இந்தியாவில் ஒரு சில ஆண்டுகள் மறைபணியில் ஈடுபட்டிருந்த Beverley Hughes என்ற பெண்ணும் Juni Howel என்ற அவரது தோழியும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இப்புதனன்று தங்கள் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிட்னி மெல்பர்ன் ஆகிய இரு நகரங்களுக்கிடையே உள்ள 1173 கிலோமீட்டர் தூரத்தை 43 நாட்களில் நடக்க முடிவு செய்துள்ள இவ்விரு பெண்களும் தாங்கள் திரட்டும் தொகையை இந்தியாவில் உள்ள தலித் குழந்தைகளின் நல வாழ்வு, கல்வி ஆகியவற்றிற்குச் செலவிட திட்டமிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ‘Go the Extra Mile’ அதாவது, ‘இன்னும் ஒரு மைல் கூடுதலாகச் செல்’ என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பு கடந்த இரு ஆண்டுகளாக 308,000 ஆஸ்திரேலிய டாலர்கள் நிதி திரட்டி இந்தியாவிலுள்ள 58,000 தலித் குழந்தைகளுக்கு அனுப்பி வந்துள்ளது.
இந்த முயற்சியுடன் தன் நடைபயணத்தையும் இணைத்துக் கொள்ள விளையும் Beverley Hughes, தான் திரட்டும் நிதியால் இன்னும் பல ஆயிரம் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.