2011-10-06 14:28:32

அக்டோபர் 07 வாழ்ந்தவர் வழியில் ........ குரு கோவிந்த் சிங்


குரு கோவிந்த் சிங் என்பவர், சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனிதக் குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் பாட்னாவில் 1666ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிறந்தார். 1675 ம் ஆண்டு முதல், இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய் மற்றும் நான்கு மகன்களை இழந்த குரு கோவிந்த் சிங், சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தினார். இவர் அராபியம், பெர்சியம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச்சவாரியிலும், பலவகை துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். 1684ம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி-வார்” எனும் நூலினை எழுதிய இவர், 1685ம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி, இன்னும் இந்தி, பெர்சியம், பஞ்சாபி ஆகிய மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு, ஆயுதப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இடங்களையும் நிறுவினார். இவர் 1699ம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பாலினப் பாகுபாடுகளைப் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார். மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் 1708ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காலமானார் குரு கோவிந்த் சிங்.







All the contents on this site are copyrighted ©.