2011-10-04 14:48:56

விவிலியத்தேடல் - கடவுளே! இது எவ்வளவு காலத்திற்கு? - திருப்பாடல் 79


அக்.04,2011. Robert the Bruce என அறியப்படும் முதலாம் இராபர்ட், ஸ்காட்லாந்துக்கு ஆங்கில ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தவர். 1329ம் ஆண்டில் தான் இறப்பது வரை ஸ்காட்லாந்து மன்னராக ஆட்சி செய்த இவர், ஸ்காட்லாந்தின் தேசிய மாவீரராக இன்றும் போற்றப்படுகிறார். இவர் இறப்பதற்கு முன்னர் தனது நண்பர்களிடம், தனது உடலிலிருந்து இதயத்தை மட்டும் பிரித்து எடுத்து அதனைத் தகுதிமிக்க ஒரு வீரர், சிலுவைப்போரின் போது புனித பூமிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது மரணப் படுக்கையருகில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜேம்ஸ் டக்லஸ் (James Douglas), அந்த இறுதி ஆசையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இராபர்ட் இறந்த பின்னர் அவரது இதயத்தைப் பாடம்பண்ணி அதனைச் சிறிய குப்பியில் வைத்து அதனைத் தனது கழுத்தில் சுற்றிக் கொண்டார் டக்லஸ். அதன் பின்னர் டக்லஸ் தொடுத்த ஒவ்வொரு போரின் போதும் தனது அரசரின் இதயத்தை தனது நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போர் புரிந்தார். 1330களின் வசந்த காலத்தில் டக்லஸ் ஸ்காட்லாந்திலிருந்து ஸ்பெயினின் கிரனாடாவுக்கு கடற்பயணம் செய்த போது மூர் இனத்தவருக்கு எதிராகப் போரிட வேண்டியதாயிற்று. அப்போது எதிரிகளால் தான் கைது செய்யப்படுவது உறுதியானது. அத்துடன் உயிரோடு தப்பிக்க முடியாது என்பதும் நிச்சயமாகத் தெரிந்தது. அப்போது டக்லஸ், தனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இதயக் குப்பியைப் பிடித்து இழுத்து எதிரிகளின் மத்தியில் தொங்கவிட்டு “எனது அரசரின் இதயமே, எமக்காகப் போராடு” என்று சப்தமாகக் கத்தினார் என்று சொல்லப்படுகிறது.

“எங்கள் அரசரே, எங்களுக்காகப் போராடுங்கள்...”! எதிரியினால் காயம்பட்ட இந்த மாவீரனின் கதறல் போலத்தான் திருப்பாடல் 79ம் இருக்கிறது. இஸ்ரயேல் மக்களும், பகைவரால் வீழ்த்தப்பட்ட நிலையில், தங்கள் கடவுளிடம், “ஆண்டவரே, எங்களுக்காகப் போராட வாரும்” என்று கதறுவதாக திருப்பாடல் 79 அமைந்துள்ளது. இஸ்ரயேல் மக்களின் மூன்று முக்கிய தேசிய அடையாளங்களை, கி.மு.587ல் பபிலோனியப் படை சிதைத்தது. எருசலேம் நகரைத் தரைமட்டமாக்கியது. எருசலேம் ஆலயத்தையும் ஆலய அடியார்களையும் அழித்தது. இந்த அழிவுக்காக அம்மக்கள் புலம்பினர். ஏனெனில் இந்த எருசலேம் நகரம் கடவுளின் நகரமாக மட்டுமல்லாமல் அம்மக்களின் நகரமாகவும் இருந்தது. எருசலேம் ஆலயம் கடவுளின் பிரசன்னம் இருக்கும் இடமாக மட்டுமல்லாமல் மிகவும் தூய இடமாகவும் இருந்தது. பபிலோனியர்கள், கடவுளின் ஊழியர்களைக் கொன்றதோடு அவர்களின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உணவாகப் போட்டு விட்டார்கள். அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள், அவர்களை அடக்கம் செய்வதற்குக்கூட யாரும் இல்லை. மொத்தத்தில் எருசலேம் ஆமை புகுந்த வீடு போல ஒன்றுமில்லாமல் ஆகியது.

தங்களது குலப்பெருமையை வேற்று இன மக்களிடையே அறிவித்துக் கொண்டிருந்த எருசலேம் அழிக்கப்பட்டதை வைத்து இஸ்ரயேலின் எதிரிகள் தங்களை எள்ளி நகையாடுகின்றனர் என்று ஆண்டவரிடம் சொல்கின்றனர்....

“ஆண்டவரே! எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம். எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ?..... ”

பொதுவாக, ஒரு தந்தை தனது மகன் தவறு செய்யும் போது கண்டிக்கிறார் என்றால், அது மகன் மீது அவர் வைத்துள்ள அளவுகடந்த பாசத்தால்தான். மகன் நல்ல மனிதனாகச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகத்தான். இஸ்ரயேல் மக்களையும் இறைவன் தண்டித்தது அவர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பால்தான். இம்மக்கள் தம்மைத் தவிர வேறு அந்நிய தெய்வங்களை வழிபடக் கூடாது என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருந்தார். இதனை இணைச்சட்ட நூல் அதிகாரம் 29 (29:22-28) சொல்கிறது. இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளைவிட்டு வேற்றுத் தெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டனர். இதனால் கடவுள் சினங்கொண்டு எருசலேம் நகர் அழிவுறச் செய்தார். இவர்ளைப் பகைவர்களிடம் கையளித்தார். இருந்தபோதிலும் கடவுளின் இந்தக் கோபம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்பதுதான் ஆசிரியரின் கேள்வி. கடுமையான அழிவுகளையும் அண்டை நாட்டவரின் கிண்டல்களையும் கேட்ட இம்மக்கள் தங்கள் ஆண்டவரிடம் மன்றாடுகின்றனர். எப்படியெனில்......

“எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும். உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும். எங்கள் பாவங்களை மன்னித்தருளும். 'அவர்களின் கடவுள் எங்கே?' என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்?”

நாமும்கூட துன்பத்தால் துவட்டி எடுக்கப்படும் போது சில நேரங்களில், “நான் ஏதும் தவறு செய்துவிட்டேனோ, அதற்காகத்தான் ஆண்டவர் என்னைத் தண்டிக்கிறாரோ அல்லது நான் செய்த இந்தக் குற்றத்துக்காகத்தான் தண்டனை அனுபவிக்கிறேனோ” என்று சிந்திப்பது இல்லையா? அந்நேரங்களில் நம்மையும் அறியாமல், “ஆண்டவரே, எனது பாவங்களுக்கேற்றபடி என்னை நடத்தாதேயும். எனது பாவங்களை மன்னித்தருளும்” என்று தனியாக அமர்ந்து செபிக்கின்றோம் அல்லவா? 79ம் திருப்பாடல் ஆசிரியும் இஸ்ரயேல் மக்கள் அனுபவித்தத் துன்பத்திற்கானக் காரணத்தை நேர்மையுடன் ஏற்றுக் கொள்கிறார். அதேசமயம் அந்த மனவேதனைகளின் முழுப்பளுவையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்கிறார். ஏனெனில் இம்மக்கள் தங்களது வாழ்க்கையில் இறைவனைத் தவிர வேறு யாரிடமும் தங்களது வேதனைகளின் சுமையை இறக்கி வைப்பதில்லை. அடித்தாலும் உதைத்தாலும் இறுதியில் அவர்களை அணைப்பவர் இறைவன் ஒருவரே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இறைவனும் அவர்கள் வாழ்விலும் வரலாற்றிலும் ஒன்றாகக் கலந்திருந்தார்.

ஒருவருக்கு நெருக்கமாக இருப்பது என்பது அவரது இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதாகும். கடவுளுக்கு உரியவராய் இருப்பது என்பது, அவர் விரும்பும் செயல்களைச் செய்வதாகும். ஆயினும் கடவுளுக்காக எதையும் செய்வேன் என்று சொல்லும் தைரியமான இதயம், பலவீனமான இதயமாக மாறிய நிகழ்ச்சிகளும் உண்டு. இயேசுவின் தலைமைச் சீடராக இருந்த பேதுரு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “ஆண்டவரே! உமக்காக எனது உயிரையும் கொடுப்பேன்” என வீரவசனம் பேசிய பேதுரு, இயேசுவின் எதிரிகளிடம் இயேசுவை யார் எனத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். இப்படி வாழ்க்கையில் பயமும் சோதனையும் நெருக்கடியும் நேரிடும் போது இதயம் தைரியத்தை இழக்கிறது, கலக்கம் அடைகிறது, தனிமை வாட்டுகின்றது, இறைவனும் கைவிட்டுவிட்டார், எல்லாரும் ஒதுங்கிவிட்டனர் என்ற பய உணர்வு உண்டாகிறது.

எவ்வளவு பெரிய மாவீரனாக இருந்தாலும் நெருக்கடியின் உச்சத்தில் அவனது கதறல் அந்த டக்லசின் கதறல் போன்றதுதான். ஆயினும், இந்தத் திருப்பாடல் 79ல் ஆசிரியர் கேட்பது போல, “கடவுளே இந்த வேதனைகள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு? இந்த வேதனைகள் ஏன்?” என்ற கேள்விகளை நாமும் எழுப்ப வேண்டும். உண்மைக் கடவுளைப் புறக்கணித்து வாழ்ந்த போதெல்லாம் இஸ்ரயேல் மக்கள் அந்தக் கடவுளின் கோபத்திற்கு ஆளானார்கள். அதேபோல் கடவுளை மறந்து செயல்படும் நாடும் நகரமும் வீடும் தழைத்ததாக வரலாறு இல்லை. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அண்மை ஜெர்மனிப் பயணத்தில், கடவுளை மறந்த ஹிட்லரின் ஆட்சி, அவர்மீது உலகே எவ்வளவு வெறுப்படையச் செய்ததது, உலகில் எவ்வளவு துன்பத்தைக் கொண்டு வந்தது என்று விளக்கினார். முத்தாய்ப்பாக, “கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்குதான் எதிர்காலம் இருக்கும்” என்று கூறினார்.

குயவன் ஒருவர் பல வடிவங்களில் மண்பானைகளைச் செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த புத்த பிக்கு ஒருவர், அந்தக் குயவனின் வேலையைப் பார்த்துக் கொண்டே தரையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. இது உன்னுடைய ஆடா? என்று பிக்கு கேட்க, “இல்ல சுவாமி, இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமா வந்தது. பண்டிகை வருதுல. அதனால சாமிக்குப் பலி கொடுக்கக் கட்டிப் போட்டிருக்கிறேன். பலி கொடுத்தா சாமிக்குப் பிடிக்கும், சாமி நன்மை செய்யும்” என்றார் குயவர். உடனே பிக்கு தனது கையிலிருந்த மண்பானையைப் போட்டு உடைத்தார். பின்னர் அதன் சில்லிகளைப் பொறுக்கிக் குயவரிடம் பவ்யமாக நீட்டினார். குயவனுக்குக் கோபம். இந்தாப்பா உனக்கு இது பிடிக்கும்தானே, இந்தாப் பிடி என்றார். என்ன குருவே, நான் செய்த பானையில் எனது உழைப்பு முழுவதும் அடங்கி இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன்? என்றார். நல்லது மகனே. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை வெட்டிக் கொன்றுப் பலியிடலாம் என்று உனக்குச் சொன்னது யார்? இதை இறைவன் ஏற்று மகிழ்ந்து வரம் தருவார் என்று எப்படி நம்புகிறாய்?. எந்தத் தாய் தனது குழந்தைக் கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்?. எந்தத் தந்தை தனது குழந்தைக் கொல்லப்படுவதை விரும்புவார்? என்று பிக்கு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். குயவன் நிதானமாக ஆட்டைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினார்.

அன்பு நெஞ்சங்களே, தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். இறையுணர்வு இல்லாத வாழ்க்கை, நீரில்லாப் பாலைநிலம் போல் ஆகிவிடும். கடவுள் பற்றுடன் வாழும் இதயம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

ஆம். கடவுளை ஏற்கும் இதயத்திற்கு வளமான எதிர்காலம் உண்டு.

ஆண்டவரே! உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர். என் கடவுளே! உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்.







All the contents on this site are copyrighted ©.