2011-10-04 14:56:08

பிலிப்பின்ஸில் சுற்றுச்சூழலின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் திரு உருவத்தைத் தாங்கிய ஊர்வலம்


அக்.04,2011. இயற்கையின் மீது ஆர்வம் கொண்டிருந்த புனித அசிசி நகர் பிரான்சிஸ் அவர்களின் திருநாள் இச்செவ்வாயன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிலிப்பின்ஸ் நாட்டின் Quezon நகரில் 1000க்கும் அதிகமான இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
சுற்றுச்சூழலின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் திரு உருவத்தைத் தாங்கிய பிரான்சிஸ்கன் துறவியர் ஊர்வலத்தின் முன் நடக்க, அவர்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
பிலிப்பின்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் அளவு மேற்கொள்ளப்படும் மரம் வெட்டுதல், மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வூர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
ஊர்வலம் சென்ற வழியெங்கும் சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கப்படும் ஆபத்துக்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பிலிப்பின்ஸ் நாட்டில் 50 விழுக்காடு காடுகள் தேவையாக இருக்கும் வேளையில், தங்கள் நாட்டில் இப்போது 3 விழுக்காடு காடுகளே உள்ளன என்றும், காடுகளை அழிக்கும் போக்கை நிறுத்த வெறும் சட்டதிட்டங்கள் மட்டுமே உதவாது என்றும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பேராசையை ஒழித்து கடவுளுக்குச் சேவைகள் செய்த புனித பிரான்சிஸ், இயற்கையின் வழியாக இறைவனைச் சந்தித்ததைப் போல், நாமும் இயற்கையை அழிக்கும் பேராசைகளை விடுத்து, சுற்றுச்சூழலைக் காப்போம் என்று இவ்வறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.