2011-10-04 14:55:54

அரசையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே பாகிஸ்தானில் நிலவும் சட்டங்கள் நடுநிலையாக இருக்க முடியும் - இஸ்லாமாபாத் ஆயர்


அக்.04,2011. அரசையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே பாகிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டங்கள் நடுநிலையாக இருக்க முடியும் என்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
இவ்வாண்டு சனவரி மாதம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில ஆளுநர் Salman Taseer அவரது மெய்க்காப்பாளரான Mumtaz Qadri என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை குற்றத்திற்காக, Mumtaz Qadriக்கு பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் இச்சனிக்கிழமை மரணதண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட ஆசியா பிபியை விடுவிக்கக் கோரி குரல் எழுப்பிய Salman Taseerஐக் கொன்றது சரியே என்றும், அவரை கொலை செய்த Mumtaz Qadri கௌரவிக்கப்பட வேண்டுமேயொழிய அவருக்கு மரண தண்டனை அளித்திருப்பது தவறு என்று இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினர் பலர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தத் தீர்ப்பை குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்ட பல கிறிஸ்தவத் தலைவர்கள், ஓர் உயிரை எடுப்பது என்பதை விட, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே தங்களுக்கு திருப்தியை அளித்துள்ளது என்று கூறினர்.
தான் மரண தண்டனையை எப்போதும் எதிர்ப்பதாகக் கூறிய ஆங்கலிக்கன் ஆயர் Alexander John Malik, பாகிஸ்தான் நீதித் துறை துணிவுடன் செயல்பட்டிருப்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறினார்.
Mumtaz Qadriயை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆசியா பிபியை தூக்கிலிட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.