2011-10-04 14:48:40

அக்டோபர் 05, வாழ்ந்தவர் வழியில்... வள்ளலார்


வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் சிதம்பரத்திற்கருகேயுள்ள மருதூரில் 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்தார். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். இவரது அன்னை குழந்தைகளோடு சென்னையில் குடியேறினார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் வாழ்ந்த இராமலிங்கர், சமுதாயப் பிரச்சினைகளை நன்கு உணர்ந்திருந்தார். அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகவும், சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். தன் கொள்கைகளின் வெளிப்பாடாக, சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை இவைகளை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது. உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள், மக்களின் பசியாற்றும் பணியைத் தொடர்கின்றனர்.
இவர் பாடிய எட்டாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. திருவருட்பாவின் பல பாடல்கள் பல்லாயிரம் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளன. வள்ளலார் 1873ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மறைந்தார்.








All the contents on this site are copyrighted ©.