2011-10-03 15:45:22

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டுகோள்


அக் 03, 2011. இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்குமாறு Amnesty International எனும் சர்வதேச மன்னிப்பு அவை அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் இம்மன்னிப்பு அவையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டோனல்ட்.
தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின்போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்கவேண்டும் என்றும், அதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பேற்பதற்கான முயற்சியில் முதலடியை எடுத்து வைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29ம் தேதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டோனல்ட் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.