2011-10-03 15:32:12

அக்டோபர் 04 வாழ்ந்தவர் வழியில்..... திருப்பூர் குமரன்


இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியாகிய திருப்பூர் குமரன் 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அச்சமயம் இவர் திருப்பூரில் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்றார். அப்போது இவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார் இவர். திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு, திருப்பூரில், “திருப்பூர் குமரன் நினைவகம்” ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையமும் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் 1932ம் ஆண்டு சனவரி 11ம் தேதி இறந்தார்.







All the contents on this site are copyrighted ©.