2011-10-01 15:09:03

மியான்மார் அரசு, அணைக்கட்டுத் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியிருப்பதற்கு ஆயர் வரவேற்பு


அக்.01,2011. மியான்மார் அரசு, நீர்மின்சாரத்திட்டம் ஒன்றுக்காகக் கட்டிவந்த மிகவும் சர்ச்சைக்குரிய அணைக்கட்டுத் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியிருப்பதை வரவேற்றுள்ளார் மியான்மார் ஆயர் ரெய்மண்ட் சா போ ராய்.
இது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் போ ராய், மியான்மார் அரசு, பொதுமக்களின் விருப்பத்திற்குச் செவிமடுக்க விரும்புவதாக அறிவித்துள்ளது, நாட்டிற்கு நல்ல ஓர் அடையாளமாக இருக்கின்றது என்றார்.
இந்த அணைக்கட்டுத் திட்டத்தால் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆயர்களாகிய தாங்களும் பொதுநிலைக் கிறிஸ்தவர்களும் அரசுக்கு ஏற்கனவே விளக்கியிருக்கிறோம் என்ற ஆயர், மியான்மார் அரசு தொடர்ந்து மக்களின் கருத்துக்களைக் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
மியான்மாரின் முக்கிய நதியான ஐராவதியில் சீன-பர்மிய கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுவரும் இந்த மையித்சோன் அணை அமையும் பகுதி, இராணுவத்திற்கும் கச்சின் இனச் சிறுபான்மைப் புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வரும் ஒரு களமாக இருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.