2011-10-01 14:59:17

அக்டோபர் 02, வாழந்தவர் வழியில்...


இந்திய அரசியல் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது, பெருமையில் தலை நிமிரும் நேரங்கள் உண்டு. அவமானத்தில் தலை குனியும் நேரங்களும் உண்டு. இந்திய அரசியல் வரலாற்றில் கண்ணியமான காலடித் தடங்களைப் பதித்துச் சென்ற மூவரை நாம் எண்ணி பெருமையுடன் தலை நிமிரும் நாள் அக்டோபர் 2ம் தேதி.
குஜராத்தில் போர்பந்தர் என்ற ஊரில் 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மோகன்தாஸ் என்ற ஒரு குழந்தை பிறந்தது. இக்குழந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று வளர்ந்து, பின்னர் உலகப் புகழ்பெற்ற மகாத்மா காந்தியாக மாறினார்.
இதே அக்டோபர் 2ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. இவரது பத்தாவது வயது முதல் காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் இவர்.
இதே அக்டோபர் 2ம் தேதி 1975ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தவர் கர்ம வீரர் என்று புகழ்பெற்ற காமராஜ். ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத காமராஜ், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க உதவியாக, அவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த பெருமைக்கு உரியவர்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்பட்டாலும், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காமராஜ் ஆகியோரையும் இன்று பெருமையுடன் எண்ணிப் பார்க்கிறோம். இந்திய அரசியல் வரலாற்றில் அக்டோபர் 2ம் தேதி புண்ணியம் செய்த ஒரு நாள்.








All the contents on this site are copyrighted ©.