2011-09-28 14:39:09

பாகிஸ்தானில் பள்ளிச் சிறுமியின் எழுத்துப்பிழையினால் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஆபத்து


செப்.28,2011. குழந்தைகள் கவனக் குறைவால் செய்யும் தவறுகளையும் பெரிதுபடுத்த எண்ணும் பாகிஸ்தான் சமுதாயத்தின் கடினமான வழிமுறைகள் கவலையைத் தருகின்றன என்று இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர் Anthony Rufin கூறினார்.
பாகிஸ்தானில் Abbottabad எனுமிடத்தில் Faryal Bhatti என்ற 10 வயது பள்ளிச் சிறுமி இறைவாக்கினர் முகம்மது பற்றி எழுதும்போது கவனக் குறைவாக புரிந்த ஓர் எழுத்துப்பிழையை அவ்வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பெரிதுபடுத்தி, அக்குழந்தையை தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அச்சிறுமி தன் கவனக் குறைவால் ஏற்பட்ட பிழையை ஏற்றுக் கொண்ட போதிலும் அவளையும், அவளது குடும்பத்தையும் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அக்குழந்தையை காவல்துறை கைது செய்யவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சிறு தவறுகளையும் பெரும் பிரச்சனைகளாக மாற்றி வரும் பாகிஸ்தான் சமுதாயம், சகிப்புத் தன்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என்று ஆயர் Anthony Rufin ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.