2011-09-28 14:37:51

ஐ.நா.வில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட திருப்பீடம் ஆதரவு


செப்.28,2011. புனித பூமியில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் தனது அர்ப்பணத்தை அதிகரித்து அதற்கானத் தனது முன்னெடுப்புக்களை முடுக்கி விடுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவைக் கேட்டுக் கொண்டார்.
நியுயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்று வரும் 66 வது பொது அவையில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பு நாடாக அங்கம் வகிப்பது குறித்துப் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas இம்மாதம் 23ம் தேதி ஐ.நா.பொது அவையில் முன்வைத்துள்ள கோரிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மம்பர்த்தி, இந்தக் கோரிக்கைக்கு, அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் தீர்வு வழங்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், தற்சமயம் “நாடுகளின் குடும்பம்” எதிர் நோக்கும் முக்கிய சவால்களாக, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள், உலகில் சமய சுதந்திரம் மதிக்கப்படுவதன் தேவை, உலகம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டிப் பேசினார் அவர்.
2012ம் ஆண்டு சனவரி முதல் நாள், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்கும், ஐ.நா.வின் 193 வது உறுப்பு நாடாகப் புதிதாக இப்பொது அவையில் கலந்து கொள்ளும் தென் சூடானுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் பேராயர் தொமினிக் மம்பர்த்தி.








All the contents on this site are copyrighted ©.