2011-09-27 15:14:19

விவிலியத்தேடல் - உள்ளவருக்குக் கொடுக்கப்படும் - திருப்பாடல் 78


செப்.27,2011. RealAudioMP3 “ராஜினாமா செய்யத் தயார்: சோனியாவிடம் தெரிவித்தார் சிதம்பரம். 2ஜி விவகாரம் தொடர்பாக கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்கத் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு”.
“2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாகப் புதிதாகக் தற்சமயம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது”.
“குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மக்களின் பொதுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து அதற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுனர் கமலா பென்னிவால் வலியுறுத்தல்”
அன்பு நெஞ்சங்களே, இந்நாளின் இ-செய்தித்தாளைத் திறந்தவுடன் இப்படிப் சில செய்திகளைத் தடிம எழுத்துக்களில் காண நேர்ந்தது. மக்களால் மக்களுக்காக மக்களின் நம்பிக்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களது பொறுப்பை மேலும் திறம்படச் செய்ய வேண்டுமென்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். அதிக அதிகாரங்களைப் பெற்றவர்களிடமிருந்து அதிகமானப் பொறுப்புணர்வுகளும் அதிகமான மக்கள்பணிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. உண்மையில், சமுதாயத்தில் அதிகமாகப் பெறுகின்றவர்களிடமிருந்து அதிகமாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது நியாயமான எதிர்பார்ப்பும்கூட.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் வரலாற்றை வாசித்தால் அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட நன்மைகள் எண்ணில் அடங்காதவை என்று தெரிய வரும். அவர்கள் எகிப்தில் பாரவோன் மன்னர்களிடம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகளாக மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இறைவன் அவர்கள் மேல் பரிவு கொண்டு மோசேயைத் தேர்ந்தெடுத்து பல அற்புதங்களைச் செய்து பாரவோனின் கடின இதயத்தை உடைத்தார். இஸ்ரயேல் மக்களை எகிப்தை விட்டு அனுப்ப மாட்டேன் என்று பாரவோன் விடாப்பிடியாய் நின்றபோது இறைவன் அந்நாட்டில் பத்துப் பெருந்துன்பங்களை வரச் செய்தார். தண்ணீரை இரத்தமயமாக்கினார். நிலப்பகுதிகளைத் தவளைகளால் நிறைத்தார். நிலத்தின் புழுதியையெல்லாம் கொசுக்களாக மாற்றினார். நாடெங்கும் ஈக்களால் துன்பம் உண்டாக்கினார். கால்நடைகளை இறக்கச் செய்து கல்மழை பொழிந்தார். நாட்டை வெட்டுக்கிளிகளால் நிரப்பினார். நாட்டைக் காரிருளும் சூழ்ந்தது. இந்தத் துன்பங்களுக்குப் பின்னரும் பாரவோனின் கல்நெஞ்சு கரையாததால் தலைமகன்களை இறக்கச் செய்தார் ஆண்டவர். இவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தி இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர்கள் ஒருவழியாய் எகிப்தைவிட்டு வெளியேறி மகிழ்ச்சியோடு வந்த போது பாரவோனின் படைகள் துரத்தி வந்தன. அப்போதும் அப்படைகளைச் செங்கடலில் மூழ்கடித்தார். அதேசமயம் இஸ்ரயேல் மக்கள் எளிதாக அக்கடலைக் கடந்துவரச் செய்தார். அம்மக்கள் எகிப்திலிருந்து புதிய நாட்டை நோக்கிப் பயணம் செய்த அந்த ஆண்டுகளில் ஆண்டவர் ஆற்றிய புதுமைகள் பலப் பல. இப்படியிருந்தும் இந்த இஸ்ரயேல் மக்கள் துன்பங்களை எதிர்கொண்ட போதெல்லாம் பயம் கொண்டு இறைவனிடம் முறையிடவே செய்தார்கள். இதைத்தான் திருப்பாடல் 78ன், 12 முதல் 20 வரையுள்ள வசனங்கள் சொல்கின்றன.
“கடவுள் கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார். தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார். பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் அவர்களை வழி நடத்தினார். பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார். ஆழத்தினின்று பொங்கிவருவது போன்ற நீரை அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார். பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார். ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார். ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர். வறண்ட நிலத்தில் உன்னதருக்கு எதிராய் எழுந்தனர். தம் விருப்பம்போல் உணவு கேட்டு வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர். அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்.......”
இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்கும் தங்களது மூதாதையருக்கும் செய்த நன்மைகளை மறந்து அவருக்கு எதிராகத் தொடர்ந்துப் பேசினார்கள். ஆயினும் ஆண்டவரும் தமது பெருங்கருணையால் அவர்களை மன்னித்து தொடர்ந்து அற்புதமாய் வழிநடத்தினார். அதேசமயம் தண்டனையும் கொடுத்தார். திருப்பாடல் 78ன், 30 முதல் 36 வரையுள்ள வசனங்கள் சொல்கின்றன.
“அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயில் உணவு இருக்கும் பொழுதே, கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது. அவர்களுள் வலியோரை அவர் கொன்றார். இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார். இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள். அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர். மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்....”
“இப்படி இம்மக்கள் நாவினால் பொய் சொன்னார்கள். அவர்கள் இதயம் அவரைப் பற்றிக் கொள்வதில் உறுதியாய் இல்லை. இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர். இஸ்ரயேலின் தூயவருக்கு எரிச்சலூட்டினர். அவரது கைவன்மையை மறந்தனர். எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்.....”
என்று சொல்லும் இந்தப் பாடல் ஆசிரியர், இந்த மக்கள்மீது கடவுளின் பேரன்புக்கரம் மட்டும் அகலவேயில்லை என்பதை நிறைவாகச் சொல்கிறார்.
“இறைவன் தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார். அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார். கைவன்மையாலும் அறிவுத்திறனாலும் அவர்களை வழிநடத்தினார்....”
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து மன்னன் தாவீதின் ஆட்சிக்காலம் வரை அதாவது கி.மு.1000 வரை இறைவன் அம்மக்களுக்கு காலத்தினாற்ச் செய்த நன்மைகள் கணக்கில் அடங்காதவை. 72 வசனங்கள் கொண்ட 78ம் திருப்பாடலில் இவை தெளிவாக நினைவுகூரப்படுகின்றன. இம்மக்களின் வரலாற்றில் ஆண்டவரின் பேரன்பு, அம்மக்களின் எதிர்ப்பு, ஆண்டவர் அவர்களுக்கு அளித்த தண்டனை, அதேவேளை அவர் காட்டிய கருணை ஆகியவற்றை இப்பாடல் விரிவாக விளக்குகிறது.
இந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்கள் வாழ்வில் தலைப்பட்ட அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளார்கள். இம்மக்கள் மட்டுமல்ல, அன்பர்களே, புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் ஒவ்வொருவருமே இறைவனுக்குக் கடமைப்பட்டுள்ளோம். மத்தேயு நற்செய்தி பிரிவு 25,29ல் இயேசு சொன்னார் : “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்” என்று. இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் மட்டும் ஆண்டவர் தலைப்படவில்லை. நம் ஒவ்வொருவர் வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியிலும் அவர் செயல்படுகிறார். பிள்ளைகள் பிறப்பு, அவர்கள் படிப்பு, திருமணம், வேலை, பயணம்.... இப்படி ஒவ்வொன்றிலும் இறைவனின் தலையீடு இருக்கிறது. சில மகான்களுக்கு அவர் தன்னைக் காட்டுவது போலன்றி சாதாரண மனிதாரகிய நமக்கு, செபங்கள், தியானங்கள், சமயநூல்கள், வேறுபல நல்ல நூல்கள், சிறு சம்பவங்கள், போதகர்கள், பாமர மனிதர் எனப் பலர் வழியாக இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். அதை நாம்தான் புரிந்து உணர வேண்டும்.
தமது திருவருளை அதிகமாகவே வாரி வழங்கி வரும் இந்த இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? நாம் அன்பிலும் பண்பிலும் நீதியிலும் நேர்மையிலும் இரக்கத்திலும், மன்னிப்பிலும், சமாதானத்திலும், மொத்தத்தில் முழு மனிதனாக, மனிதப் பண்புகளோடு வாழவும் வளரவும் வேண்டுமென எதிர்பார்க்கிறார். எனவே அவரிடமிருந்து நிரம்பப் பெற்றுள்ள நாம், நமது வாழ்வு முறைகளால் நிரம்பச் செய்யவும் வேண்டும்.
நாடோடித் துறவி ஒருவர் குளிர் காலத்தில் இரவு நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். குளிர்க் காற்று கடுமையாக வீசியது. உடல் நடுங்க, தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்த அத்துறவி, வழியில் ஒரு புத்த மடத்தைப் பார்த்தார். அங்கு வந்த அத்துறவி, அந்த இரவு அங்கே தங்க அனுமதி கேட்டார். அங்கிருந்தவர்களுக்கு அவரை அங்கு அனுமதிப்பதற்கு மனமே இல்லை. அரைமனத்தோடு அவருக்கு அந்த இல்லத்தின் முன்பகுதியில் இடம் கொடுத்தார் இல்லப் பொறுப்பாளர். நள்ளிரவில் தூக்கம் கலைந்து வெளியே வந்தார் அந்தப் பொறுப்பாளர். அப்போது எரியும் தீயின் முன்பாகக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அந்தத் துறவி. அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தார் அந்தப் பொறுப்பாளர். சுவரோரம் இருந்த மரத்தாலான புத்தர் சிலைகளைக் காணவில்லை. கோபமடைந்த பொறுப்பாளர், “அடப்பாவி, என்ன காரியம் செய்தாய்? புத்தரையே எரித்துச் சாம்பலாக்கி விட்டாயே” என்று எரிச்சல்பட்டுத் திட்டினார். ஆனால் வந்தவரோ நிதானமாக ஒரு குச்சியை எடுத்து அந்தச் சாம்பலைக் கிளறத் தொடங்கினார். “என்ன செய்கிறாய்? நீ” என்று அந்தப் பொறுப்பாளர் கேட்க, வந்தவரோ, “நான் எரித்து விட்டதாகச் சொன்ன புத்தரின் எலும்புகளைத் தேடுகிறேன்” என்றார். குழம்பிப் போன பொறுப்பாளர், மடத்தின் உள்ளே சென்று நடந்தததை விவரித்தார். அப்போது மடத்தின் தலைமைக்குரு பொறுப்பாளரிடம், “முட்டாளே, வந்திருப்பவர் ஒரு ஜென் குரு. உயிரோடிருக்கும் மனிதனை விட்டுவிட்டு மரத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாயே, என்ன மனிதனய்யா நீ?” என்று சீறினார்.
தாயுமான சுவாமிகளும், “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்றார். மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத்தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே. அன்பு நண்பர்களே, “தெய்வம் மனுஷ்ய ரூபணே” என்பார்கள். இறைமகன் இயேசுவும் மனித வடிவம் எடுத்தார். இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களிடமும், இன்று நம்மிடமும் எதிர்பார்ப்பது மனிதம் நிறைந்த வாழ்வைத்தான்.
நம்மைப் பார்க்கும் ஒருவர், “உன்னைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன், நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய், நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்” என்று நம்மிடம் சொன்னால் எப்படி இருக்கும்!








All the contents on this site are copyrighted ©.