2011-09-27 13:27:53

ஜாம்பியக் கத்தோலிக்க அரசுத் தலைவர் பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஆட்சியை நடத்தத் திட்டம்


செப்.27,2011. ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அரசுத் தலைவர் Michael Sata, தனது ஆட்சியை பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் நடத்தவிருப்பதாகக் கத்தோலிக்கரிடம் தெரிவித்தார்.
இம்மாதம் 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் Michael Sata, தான் சார்ந்துள்ள பங்கு மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், இத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிய செயல்களையும் பாராட்டினார்.
திருடாதே என்று ஏழாவது கட்டளை சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவர், தனது அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
மேலும், இயேசுவும் அவரது திருச்சபையும் செய்வது போல, ஜாம்பியாவில் மக்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லுமாறு புதிய அரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Ignatius Chama.
வத்திக்கான் புள்ளி விபரங்களின்படி, ஜாம்பியாவின் சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் மக்களில் 33 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.