2011-09-26 16:20:55

வாரம் ஓர் அலசல் – ஓருலகம், ஓரில்லம், ஓரிதயம்


செப்.26,2011. அந்த ஆண்டு அந்த ஊரில் தக்காளி அமோக விளைச்சல். எல்லாத் தக்காளிகளும் குண்டு குண்டாக நல்ல நல்ல தக்காளிகள். விலையும் அபாரம். இந்நிலையில் அந்த வீட்டுக்காரர் கவலையோடு அமர்ந்திருந்தார். அந்நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார் அவரது தங்கை கணவர். உறவுக்காரர் கவலையோடு இருப்பதைப் பார்த்து, என்ன மாப்ளே, இவ்வளவு சோகம். இந்த வருஷம்தான் தக்காளி விளைச்சல் சக்கைப் போடு போட்டிருக்கே. அப்புறம் ஏன் இவ்வளவு சோகம் என்று கேட்டார். அதான் மாப்ளே ஏன் கவலையே. எனது தோட்டத்திலே சாதாரணமாக நிறையத் தக்காளிகள் சொத்தையாக இருக்கும். நானும் அவற்றைப் பிடுங்கி என்னுடைய ஆடு மாடுகளுக்குப் போடுவேன். ஆனா இப்ப எல்லாமே நல்ல தக்காளிகளா விளைஞ்சிருக்கு. சொத்தை என்று ஒன்றுகூட இல்லை. இப்போ என் ஆடு மாடுகளுக்கு எதைப் போடுவேன், நீயே சொல்லுனு தனது கவலையை மாப்ளக்கிட்டா இறக்கி வைத்தார் சோக மாப்ளே.
அன்பு நேயர்களே, கவலைகள் தானாக வருவதில்லை. அவை வருவிக்கப்படுபவை என்று உளவியல் ஆசிரியர்களும் சொல்வதுண்டு. சிலருக்கு ஒரு நாளில் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பதே அவர்களுக்குப் பெரும் கவலையாகி விடும். இப்படி கவலைப்பட்டுக் கவலைப்பட்டுச் சிலர் இதயத் துடிப்பையே நிறுத்தி விடுகின்றனர். பொதுவாக, சலிப்பும், சந்தேகமும், வெறுப்பும், எரிச்சலும், கோபமும், அவநம்பிக்கையும் கொண்டிருப்பவர்களுக்கு இதயத்தில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், சிலர் கவலையை மறக்க மதுவுக்கு அடிமையாகின்றனர். புகையிலையை மெள்ளுகின்றனர், சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகின்றனர். பேருந்துக்காகக் காத்திருக்கும் போது சிலர் பதட்டமாக, அங்குமிங்கும் நடந்து கொண்டே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வரும்.
உலகில் இதய நோய்களால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கானக் காரணங்கள் தெரிந்திருந்தும் இன்னும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 73 இலட்சம் பேர் இதய நோய்களால் இறக்கின்றனர். இவற்றைத் தவிர்க்க முயற்சி எடுத்தால் இவற்றில் 80 விழுக்காட்டைத் தவிர்க்கமுடியும் என்று நலவாழ்வு அதிகாரிகள் கூறுகின்றனர். உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் ஒருவரின் நலவாழ்வின் மூலதனங்கள். வயது வந்தோர் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களும் சிறார் 60 நிமிடங்களும் உடலை இயக்கும் வேலையோ உடற்பயிற்சியோ செய்யுமாறு நலவாழ்வு அதிகாரிகள் பரிந்துரை செய்கின்றனர்.
நாடுகளின் சட்டங்கள், புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வுக் கல்வி போன்றவற்றால் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, வயது வந்தோர் மத்தியில் தற்சமயம் குறைந்து வந்தாலும், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 விழுக்காட்டினர் புகைப் பிடிப்பவர்கள். மற்றவர்களைவிட, புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. புகைப்பிடிப்பதால் இதயத்துக்குச் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைகிறது. புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால், அவர்கள் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் வாகனங்கள் வெளியிடும் புகையைச் சுவாசித்த ஆறு மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று த லான்செட் என்ற பிரிட்டன் மருத்துவ இதழில் செய்திகள் வெளியாகியுள்ளன. சர்க்கரை நோயால் இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 விழுக்காட்டினருக்கு இக்குறைபாடு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயதோடு தொடர்புடையவை அல்ல. இவை, சிறு குழந்தைகள் முதல் எல்லா வயதினரையும் தாக்குகின்றன. மரபணுக் காரணம் தவிர, தாய் கருவுற்றிருந்த காலத்தில் வழங்கப்படும் தவறான சிகிச்சை, தீங்கு வருவிக்கும் சில மருந்துகள் அல்லது சுண்ணாம்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றாலும் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்புகள் இருக்கின்றன. சில குழநதைகளுக்குப் பிறக்கு முன்னரே இப்பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவர் அனில் ராஜ்கிர் சொல்கிறார்.
இதயம் தனது வேலையை நிறுத்திக் கொண்டால் உயிர்களின் வாழ்வும் நின்று விடும். இந்த இதயம் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சம் தடவைகள் சுருங்கி விரிகின்றது. இது ஒவ்வொருமுறையும் சுருங்கும் போது உடலிலுள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுடைய இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தத்தை அனுப்புகிறது. ஒரு நாளில் 7,200 லிட்டர் இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதயத்தின் ஆற்றலானது ஒரு குதிரையின் ஆற்றலில் 240ல் ஒரு பங்கு எனச் சொல்லப்படுகிறது.
எனவே இதய நோய்கள் மற்றும் இதயத்தைப் பாதுகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு, உலக இதய தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இஞ்ஞாயிறன்று இத்தினத்தையொட்டி ஆந்திராவில் பள்ளி மாணவ மாணவியர் சாலைகளில் சேர்ந்து ஓடி உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறினர். தமிழகத்தில் ஒரு பள்ளிச் சிறார், உலக வரைபடத்தில் இதயத்தை வரைந்து அதைச் சுற்றித் தீபங்களை ஏற்றி இதயத்தின் சிறப்பை எடுத்துரைத்தனர். துபாயில் இவ்வுலக தினத்தைத் தொடங்கி வைத்த, துபாய் நலவாழ்வுத்துறை பொது இயக்குனர் Qadhi Saeed Al Murooshid, ஐக்கிய அரபு குடியரசுகளில் பொது மக்கள் மத்தியில் இதய நோய்களைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது துறை அதிகமாக முயற்சிக்கும் என்றார். அனைத்துலக இதயக் கூட்டமைப்பின் உலக மாநாடு 2012ம் ஆண்டு ஏப்ரலில் துபாயில் நடைபெறும். இதில் உலகெங்கிலுமிருந்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இது மத்திய கிழக்குப் பகுதியில் முதன்முறையாக நடைபெறும் மாநாடாகும் என்றும் அறிவித்தார். துபாய் ராஷிட் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவின் தலைவர் மருத்துவர் Fahad Baslaib பேசுகையில், ஒவ்வொரு மாதமும் இம்மருத்துவமனையில் சேர்க்கப்படும் 50 முதல் 70 வரையிலான நோயாளிகள் இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களில் குறைந்தது 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான பதட்டமே காரணம். இத்தகைய நோயாளிகளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தருகின்றது எனத் தெரிவித்தார்.
2011ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, அதாவது இஞ்ஞாயிறன்று இவ்வுலக இதய தினம் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாண்டில் இத்தினத்தை, உலக இதயக் கூட்டமைப்பு, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் துணையோடு செப்டம்பர் 29ம் தேதி இவ்வியாழக்கிழமை கொண்டாடுகிறது. “ஓருலகம், ஓரில்லம், ஓரிதயம்” என்ற தலைப்பில் இத்தினத்தைச் சிறப்பிக்க இருக்கின்றது. இந்நாளில் குறைந்தது ஓர் இதயத்தையாவது காப்பாற்றுங்கள், அருகில் வாழ்வோரிடம் இதய நோய்கள் ஏற்படுவதற்கானக் காரணத்தை எடுத்துச் சொல்லுங்கள் என்று இந்நாள் அழைப்பு விடுக்கிறது. மேலும் இந்நோய்களைத் தவிர்க்கும் வழிகளையும் பரிந்துரைக்கின்றது.
புகைப்பிடிப்பதற்கு "நோ' சொல்லுங்கள். உப்பு அதிகம் பயன்படுத்துவதால் இரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதயநோய் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே இரத்தத்தில் தேங்கியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பையும், சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவற்றையும் சீராக வைத்திருங்கள். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளுக்கு சராசரியாக பத்தாயிரம் அடிகளாவது நடங்கள். ஏனெனில் முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக் கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். உணவில் காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஒலிவ எண்ணெய், மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய் வகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். யோகாவும் தியானமும் செய்வது நல்லது. சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சிலப் பரிந்துரைகளை முன்வைக்கின்றது உலக இதயக் கூட்டமைப்பு.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். இக்காலத்திய மனிதர், சிரிப்பதற்குக்கூட பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். மெரினா கடற்கரையில் வட்டமாக நின்று கொண்டு மக்கள் சிரித்ததைப் பார்த்த போது நாமும் வாய்விட்டுச் சிரித்து விட்டோம். காந்திஜி, தன்னுடைய இரத்த அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்கு தனது நகைச்சுவை உணர்வே காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு சமயம் ஓர் அமெரிக்கப் பெண் காந்திஜியிடம், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கோபப்பட்டது உண்டா என்று கேட்டார். அதற்கு காந்திஜி, “என்னுடைய மனைவியைக் கேளுங்கள். நான் பிறரிடம் சிறந்த முறையில் பழகுகிறேன் என்றும், அவளிடம் அப்படிப் பழகுவதில்லை என்றும் சொல்லுவாள்” என்றார். அப்போது அந்த அமெரிக்கப் பெண், “என் கணவர் என்னிடம் பழகும் போது மிக நன்றாகப் பழகுவார்” என்றார். அதற்குக் காந்திஜி, “அப்படியானால் உங்கள் கணவர் உங்களுக்குப் பெரிய அளவில் இலஞ்சம் கொடுத்திருக்க வேண்டும்” என்றார்.
சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். வளர்ந்த மனிதனும்கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக மிதிவண்டி ஓட்டுவதற்குச் சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். சிரிப்பு மனதை உற்சாகப்படுத்தும். சில நிமிடங்கள் சிரிப்பு பல வருட வாழ்க்கையைப் பரிசாக வழங்கும். “தினம் அரைமணி நேரம் சிரிப்பு” எனப் பரிசோதனை நடத்தியதில், மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு அவர்களுடைய உடலில் அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் நலமானதாக மாறிவிட்டதாம்.
உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது தர்மமாகும் என இசுலாம் கூறுகிறது. சிரிப்பு, ஓர் அற்புதமான ஜீரண மாத்திரை. எனவே அன்பு நேயர்களே, மனம்விட்டுச் சிரியுங்கள். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது இறுக்கமான இதயம் இலேசானதாக மாறும். வாழ்க்கைவானம், வசப்படும் தூரத்தில் இருக்கும். எல்லாரும் ஓருலகம், ஓரில்லம் என்ற உணர்வு அந்த இதயத்தில் பிறக்கும். எனினும் ஓர் எச்சரிக்கை. கண்ணதாசன் கூறியது போல, சிரித்து வாழ வேண்டும், ஆனால் பிறர் சிரிக்க மட்டும் வாழ்ந்திடக் கூடாது....








All the contents on this site are copyrighted ©.