2011-09-26 17:03:52

ரூ.80 ஆயிரம் கோடி செலவிட்டும் பலனில்லை: வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


செப் 26, 2011. "நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.
நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்."
இது குறித்து சக்சேனா கூறியதாவது: 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகக் கருதப்பட்டனர். தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என்றார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது எனவும் கவலையை வெளியிட்டார் அவர்.
வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் சக்சேனா.







All the contents on this site are copyrighted ©.