2011-09-26 16:41:58

நாத்ஸியிசத்தின் பாடங்களை மீண்டும் நினைவுகளுக்குக் கொணர திருத்தந்தையின் திருப்பயணம் உதவியுள்ளது


நாத்ஸியிசத்தின் பெரும் சோக நிகழ்வு வழங்கிய பாடங்களை மீண்டும் நம் நினைவுகளுக்குக் கொணர திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டிற்கான அண்மைத் திருப்பயணம் உதவியுள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வத்திக்கான் தொலைக்காட்சியின் 'ஒக்தாவா தியேஸ்' என்ற வாராந்திர நிகழ்ச்சியில் இக்கருத்தை வெளியிட்ட குரு லொம்பார்தி, ஒருவர் பெர்லின் நகரைத் தாண்டிச் செல்லும்போது, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட பக்கங்களின் சுமையை உணராமல் இருக்க முடியாது என்றார்.
நாத்ஸி கொடுமையாளர்களைத் 'திருடர்களின் கூட்டம்' எனத் திருத்தந்தை கூறியதையும், யூதப்பிரதிநிதிகளை அவர் சந்தித்து உரையாடியதையும் எடுத்துரைத்தத் திருப்பீடப் பேச்சாளர், நாத்ஸி வதைப்போர் முகாமில் துன்புற்றோர் மற்றும் அக்கொடுமைகளின் சாட்சிகளும் திருத்தந்தையுடனான சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர் என்றார்.
நாத்ஸி வதைப்போர் முகாம்களில் மறைசாட்சிகளாக உயிரிழந்தவர்களின் ஒளி, அக்காலத்தைய இருண்ட காலத்திலும் ஒளிர் விட்டு தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றார் இயேசு சபை குரு லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.