2011-09-24 16:14:31

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நாயகன் இருவேடங்களில் நடித்தார். அவர்களில் மூத்தவர் பார்க்க, பழக மிகவும் கடினமாக இருப்பார். சரியான படிப்பு இல்லாததால், சரியான வேலையும் இல்லை. அவரது இரட்டைப் பிறவியான இளையவர் படித்தவர், நல்ல வேலையில் இருந்தார், பக்திமான். அப்பாவுக்கு மிகவும் பிடித்தவர். வீட்டுக்குள் மட்டுமே இவர் பக்திப்பழம். வெளி உலகில் சரியான வில்லன். தந்தை சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைபோல நடித்து வரும் இவர், இறுதியில் தந்தையின் கழுத்தைப் பிடித்து நெறிக்கும் அளவிற்கு தன் சுய உருவை வெளிப்படுத்துகிறார். அது வரை தந்தையிடம் சரியான பெயர் எதுவும் வாங்காத மூத்தவர் தந்தையைக் காப்பாற்றுகிறார்.
இதுபோன்ற பல திரைப்படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இத்திரைப்படங்களில் வருபவர்களைப் போன்ற பல மனிதர்களையும் பார்த்திருக்கிறோம். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனும் வைத்து பேசும் பலரை நாம் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம்... இல்லையா? சில வேளைகளில் நாமும் இதைப்போல செயல்பட்டிருக்கிறோம்... உண்மைதானே? முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப் பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.
சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று வாழும் இரு மகன்களைப் பற்றிய ஓர் உவமையை இன்றைய நற்செய்தியில் இயேசு நம்முன் வைக்கிறார். மத்தேயு நற்செய்தியில் இந்த உவமைக்கு 'இரு புதல்வர்கள் உவமை' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவிலியப் பேராசிரியரான William Barclay என்ற மேதை, இந்த உவமைக்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தந்துள்ளார்... “The Better of Two Bad Sons”, அதாவது, "இரு மோசமான மகன்களில் சிறந்தவர்" என்பது அவர் தந்த தலைப்பு. இயேசு கூறும் இந்த உவமையில் நாம் சந்திக்கும் இருவருமே தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர் உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இந்த இருவரில் நமது கவனத்தை அதிகம் கவர்வது இரண்டாம் மகன்தான். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலைக் கயிறாகத் திரிப்பதாகவும் உறுதிகள் அளிக்கும் பலரை இந்த இரண்டாவது மகன் நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றார்.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். நாள் முழுவதும் பேசும் பலர், செயல்கள் என்றதும் காணாமல் போகும் வித்தையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்கு கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச் சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. சில வேளைகளில் அந்தப் புதர்களிலிருந்து பாம்புகளும் கோவிலுக்குள் வருவதுண்டு. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப் பங்குத்தந்தை வந்து சேர்ந்தார். இளையவரானதால் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது அவர் மனதை உறுத்தியது.
ஒரு ஞாயிறுத் திருப்பலியில் மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலை செய்தால், நமது கோவிலையும் சுற்றுப் பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்." என்று சொன்னார். இதைக் கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கைதட்டினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப் பற்றி பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை உதவிப் பங்குத்தந்தை தவறாமல் குறித்துக் கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
உதவிப் பங்குத்தந்தை மகிழ்ச்சியோடு பங்குத்தந்தையிடம் கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை அந்தப் பங்கில் பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "Father, நீங்கள் சொன்ன இந்த யோசனையைக் கொஞ்சம் practicalஆக, கொஞ்சம் அழுத்தமாக அடுத்த வாரம் சொல்லிப்பாருங்கள்" என்று ஆலோசனை தந்தார்.
உதவிப் பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நான் போன வாரம் சொன்னது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். ஒரு சில மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராகக் கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வேலை செய்ய எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்ற வாரம் எண்ணமாக, பேச்சாக இருந்தது இப்போது ஒரு செயலாக மாறும் வேளையில் ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி ஒடுங்கிப் போனது.
சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம். இந்த உவமைக்குப் பின் இயேசு தன்னைச் சுற்றியிருந்தோரின் சிந்தனைகளுக்கு ஒரு கேள்வியையும், அவர்கள் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் வகையில் ஒரு கூற்றையும் சொன்னார்.
மத்தேயு நற்செய்தி 21: 31-32
“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.
இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலருக்குச் சாட்டையடிபோல ஒலித்திருக்கும். இந்த வார்த்தைகளை ஓர் உருவகமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அது இப்படி ஒலிக்கும்: “குப்பைகள் கோவிலில் வைக்கப்படும், கோவிலுக்கென குறிக்கப்பட்ட காணிக்கைகள் குப்பையில் எறியப்படும்.” இத்தனை கடுமையாக இயேசுவின் கூற்று அமைந்துள்ளது.
யூதர்களைப் பொறுத்தவரை, அதிலும் சிறப்பாக, யூத மதக் குருக்களைப் பொறுத்தவரை தாங்கள் கோவிலில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய காணிக்கைப் பொருட்கள் என்றும், வரி தண்டுவோரும், விலைமகளிரும் கோவில் என்ன, சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி எறியப்பட வேண்டிய குப்பைகள் என்றும் எண்ணி வந்தனர். அவர்கள் தங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என்று இயேசு ஆணித்தரமாகச் சொன்ன வரிகள் மதத்தலைவர்களின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.
இந்த வரிகளை இயேசு சொன்ன சந்தர்ப்பத்தையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தி, பிரிவு 21ல் இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முன், அவர் எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்தார். அவர் எந்த அதிகாரத்தில், தைரியத்தில் அதைச் செய்தார் என்று யூதகுருக்கள் கேள்விகள் கேட்டு, அவரை மிரட்டியபோது, இயேசு இந்த இரு மகன்கள் உவமையையும், அதற்குப் பின் வரும் காரசாரமான வரிகளையும் சொல்கிறார். கோவிலை அவர் சுத்தம் செய்தபோதே அவர்கள் மனம் கோபத்தில் வெந்து போயிருக்கும். அந்த வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார்.
“கடவுள் உங்களுக்குத் தந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டீர்கள், அல்லது வேண்டுமென்றே அந்தச் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டீர்கள்” என்று இயேசு அந்த மக்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தினார். யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். அது மட்டுமல்ல, “யோவான் கொண்டு வந்த நல்வழியை அவர்கள் பின்பற்றியதைப் பார்த்தும் நீங்கள் மாறவில்லையே” என்று வேதனையோடு இயேசு இடித்துச் சொன்னார். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவர்கள் மீது இந்த வார்த்தைகள் சாட்டையடிகளாய் விழுந்திருக்க வேண்டும். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் ஏற்று, நம் மனதைக் கொஞ்சம் ஆராய்வோம். இன்றைய நற்செய்தியிலிருந்து நாமும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த மகனை நினைத்துப் பார்க்கும்போது, "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்' பலரை நினைக்கத் தூண்டுகிறது. இப்படித் தேனொழுகப் பேசிய ஒருசிலரை நம்பி நாம் சென்றபோது, தேள்போலக் கொட்டி, நமது வேதனையைக் கூட்டிய அவர்களை இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த வலி ஆழமானது. இந்த வலி ஆறாமல், நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருந்தால், நம்மை இறைவன் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
வாய் வார்த்தைகளால் உறுதி தந்துவிட்டு, பின்னர் ஒன்றும் செய்யாமல் நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இன்று பொருத்தமாக இருக்கும். "உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்து கொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு நாமும் நம் இறைவனை வேண்டுவோம்:
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்….
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”

வள்ளலார்









All the contents on this site are copyrighted ©.