2011-09-23 17:04:04

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : ஜெர்மானியர்கள் மதத்தைப் புறக்கணிக்க வேண்டாம்


செப்.23,2011. “செவிசாய்க்கும் இதயம் : சட்டத்தின் அடித்தளங்கள் பற்றிய சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் திருத்தந்தை. எனது தாயகமான ஜெர்மன் நாடாளுமன்றத்தில் மேன்மைமிக்க உங்கள் முன்பாகப் பேசுவதை மதிப்பாகவும் அதேசமயம் அதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். சட்டத்தின் அடித்தளங்களை விவிலியத்திலிருந்து, அரசர் புத்தகம் முதல் நூலில் மன்னன் சாலமோன் கடவுளிடம் கேட்டுப் பெற்ற வரத்தை வைத்துச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சாலமோன், வெற்றியையோ, செல்வத்தையோ, தீர்க்க ஆயுளையோ, எதிரிகளை அழிக்கவோ ஆண்டவரிடம் வரம் கேட்கவில்லை. ஆனால் அவர் நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் ஞானத்தைக் கேட்டார். ஓர் அரசியல்வாதிக்கு கட்டாயம் தேவைப்படுவது என்ன என்பது பற்றி விவிலியம் இந்த நிகழ்ச்சி வழியாக நமக்குச் சொல்ல விரும்புகிறது. இயல்பாகவே ஓர் அரசியல்வாதி வெற்றியைத் தேடுவார். அவ்வெற்றியின்றி அரசியல் செயல்களைத் திறமையாகச் செய்ய முடியாது. எனினும், இந்த வெற்றியானது, நீதியின் கூற்றைக் கொண்டிருக்க வேண்டும். எது சரி என்பதைப் புரிந்து சரியானதைச் செய்வதற்கு விருப்பம் காட்ட வேண்டும். அதேசமயம் வெற்றி கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் அது ஒருவரைச் சரியான செயலுக்கு இட்டுச் செல்லாது, அத்துடன் நீதியை அழித்து விடும். ஹிட்லரால் நடத்தப்பட்ட நாத்சி ஆட்சி, மிகுந்த அளவில் திட்டமிட்ட திருட்டுக் கும்பலால் நடத்தப்பட்டு அகில உலகையே அச்சுறுத்தி நரகத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. அதிகாரம் சுரண்டப்படும் பொழுது என்ன நடக்கும் என்பதை நமது சொந்த அனுபவத்திலிருந்து ஜெர்மானியர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம். இந்த நாத்சி சர்வாதிகாரத்தின் போதும் அதை எதிர்த்த இயக்கங்கள் தங்கள் நம்பிக்கைகளில் விடாப்பிடியாய் இருந்து மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் நீதிக்கும் மனித சமுதாயத்துக்கும் மாபெரும் சேவை செய்தார்கள். எனவே ஜெர்மானியர்கள் மதத்தைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இன்றும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தேர்ந்து தெளியும் இதயத்திற்குச் செவிசாய்த்து நீதிக்கும் அமைதிக்கும் சேவை செய்யும் உண்மையான சட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றியைத் தேடுவதைவிட நீதியைத் தேடுங்கள் என்றும் கேட்கிறேன் என்றார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.