2011-09-22 16:58:55

திருத்தந்தையின் 21 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – ஜெர்மனியில் திருத்தந்தை


செப்.22,2011. இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் பகல் 12 மணிக்கு, உரோம் சம்பினோ இராணுவ விமான நிலையத்திலிருந்து தனது 21வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர் ஜெர்மனிக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாட்கள் கொண்ட இந்த வெளிநாட்டுத் திருப்பயணம், உலக ஊடகவியலாளரால் அதிக ஆர்வமுடன், அதேசமயம் விமர்சனக் கண்களுடன் நோக்கப்படுகின்றது. காரணம், இப்பயணம், “ஒரு ஜெர்மானியத் திருத்தந்தை ஜெர்மனியில்”, அதாவது ஜெர்மன் நாட்டவரானத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது தாயகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ள முதல் திருப்பயணமாகும். 2005ம் ஆண்டில் பாப்பிறை பணியை ஏற்ற இவர் ஏற்கனவே இரண்டு முறைகள் அந்நாட்டிற்குச் சென்றிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினராக முதல் முறையாகத் தற்போதுதான் சென்றுள்ளார். ஜெர்மன் மற்றும் வத்திக்கான் கொடிகளை முகப்பில் கொண்டு திருத்தந்தையை ஏற்றிச் சென்ற ஆல்இத்தாலியா320 என்ற விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே அவரை அவரது தாயகத்திற்குக் கொண்டு சேர்த்தது. பெர்லின் நகர் Tegel சர்வதேச விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பள விரிப்பில் ஜெர்மன் அரசுத் தலைவர் கிறிஸ்டியான் Wulff, அவரது மனைவி, ஜெர்மன் சான்சிலர் அதாவது பிரதமர் ஆங்லா மிர்க்கெல், அவரது கணவர் ஆகியோர் அவரைக் கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர், மிர்க்கெல் தனது காபினெட் உறுப்பினர்களைத் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அங்கு நின்றிருந்த கத்தோலிக்கத் திருச்சபை பிரமுகர்களையும் மஞ்சளும் வெள்ளையும் கொண்ட வத்திக்கான் கொடிகளை ஏந்திக் கொண்டு நின்றிருந்த பள்ளிச் சிறாரையும் ஆசீர்வதித்தார். சிறார் அவருக்கு மலர்க் கொத்துக்களை வழங்கினர். திருத்தந்தை, விமானப்படிகளிலிருந்து இறங்கி வந்த போது பாதுகாப்புக்கென இராணுவ ஜெட் விமானம் மேலே பறந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் 21 துப்பாக்கிகள் முழங்கி அவருக்கு அரசு மரியாதையும் வழங்கின. பின்னர் அரசுத் தலைவரும், பிரதமரும் அவரைக் கார் வரையில் அழைத்துச் சென்றனர். இவ்வரவேற்புக்குப் பின்னர் அங்கிருந்து பத்து கிலோ மீட்டரில் இருக்கின்ற Bellevue என்ற ஜெர்மன் அரசுத் தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை.
பெர்லின் அரசுத் தலைவர் மாளிகை சென்ற திருத்தந்தை முதலில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பிரமுகர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அம்மாளிகை வளாகத்தில் பசுமைப் புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளச் சிறிய மேடையில் அரசுத் தலைவர் Wulffம் திருத்தந்தையும் நிற்க, ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் அரசு மரியாதை நிகழ்வுகள் தொடங்கின. ஜெர்மன் மற்றும் வத்திக்கான் நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் இடம் பெற்றன. அதன் பின்னர் ஜெர்மன் அரசுத் தலைவர் Wulff, திருத்தந்தையே, ஜெர்மனி நாட்டில் விசுவாசம் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இல்லை, மாறாக அது பன்முகச் சமுதாயத்தில் அதற்குரிய இடத்தில் இருக்கின்றது. இதனை ஏற்கனவே இந்தப் பெர்லின் நகரில் காணலாம் என்று தனது வரவேற்புரையைத் தொடங்கினார்.
இந்நாட்டில் அரசும் திருச்சபையும் தனித்தனியாக இயங்குபவை. ஆயினும், திருச்சபை அதற்கு இணையாகச் செல்வது இல்லை, மாறாக, அது சமூகத்தின் மையத்தில் இருக்கின்றது. திருத்தந்தை 2ம் ஜான் பால், போலந்து கத்தோலிக்கரின் பணி, ஜெர்மன் கிறிஸ்தவ சமுதாயம் ஆகியவை இன்றி இரண்டு ஜெர்மனிகளும் அமைதியான முறையில் இணைந்திருக்கும் புரட்சிகரப் புதுமை இடம் பெற்றிருக்காது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தான் நன்றி கூற விரும்புவதாகத் தெரிவித்தார். பின்னர் திருத்தந்தையும் தனது தாயகத்திற்கான முதல் உரையை வழங்கினார்.
இவ்வுரை இடையிடையே பலத்த, நீண்ட நேரக் கைதட்டல்களுக்கு மத்தியில் இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெல்வியு என்ற பெயருக்கேற்றால் போலான அழகான இம்மாளிகையை ஜெர்மனி மற்றும் வத்திக்கான் கொடிகள் அலங்கரித்திருந்தன. இங்கு திருத்தந்தையும் அரசுத் தலைவரும் தனியாகச் சந்தித்துப் பேசினர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜெர்மன் ஆயர் பேரவை மையத்திற்குச் சென்றார் திருத்தந்தை. அங்கு ஜெர்மன் சான்சிலர் ஆங்லா மிர்க்கெல்லைச் சந்தித்தார். மிர்க்கெல், லூத்தரன் கிறிஸ்தவ சபைப் போதகரின் மகளாவார். இச்சந்திப்புக்குப் பின்னர் அந்த மையத்தில் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. மாலையில் ஜெர்மன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றுவது, யூதமதப் பிரதிநிதிகளைச் சந்திப்பது, பெர்லின் ஒலிம்பிக் அரங்கத்தில் திருப்பலி நிகழ்த்துவது ஆகியன இவ்வியாழன் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
உரோமையிலிருந்து பெர்லினுக்குச் சென்ற விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையே, இந்த நான்கு நாட்கள் திருப்பயணத்தில் சுமார் நான்காயிரம் நிருபர்கள் இப்பயண நிகழ்வுகள் பற்றிச் செய்திகளை வெளியிடுவார்கள். இந்த விமானத்தில் 20க்கும் மேற்பட்ட ஜெர்மன் நிருபர்கள் உட்பட 68 நிருபர்கள் இருக்கிறோம் என்று சொல்லி நான்கு கேள்விகளை அவர்கள் முன்வைத்தார்கள். திருத்தந்தையே, தாங்கள் ஜெர்மானியர் என்ற உணர்வு இன்னும் இருக்கின்றதா, திருச்சபையைவிட்டுச் செல்லும் ஜெர்மானியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதே, அங்கு காட்டப்படும் எதிர்ப்பை எப்படிப் பார்க்கின்றீர்கள், மார்ட்டின் லூத்தரின் இடத்திற்குச் செல்லுகின்றீர்கள், லூத்தரன் சபையினருக்கு எடுத்துச் செல்லும் செய்தி என்ன என அவரிடம் கேட்கப்பட்டன. இவற்றிற்கு விளக்கமான பதில்களை அளித்துள்ளார் திருத்தந்தை.
ஒரு சுதந்திரமான, சமயச்சார்பற்ற சமுதாயத்தில் போராட்டம் இடம் பெறுவது வழக்கமான ஒன்று. வன்முறையற்ற போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. மேலும், அண்மையில் மக்கள் திருச்சபையைவிட்டு விலகுகிறார்கள் என்றால் அது பரிசீலித்துப் பார்க்கப்பட வேண்டும். அண்மைக் காலங்களில் திருச்சபையில் வெளிப்பட்ட குற்றங்களால் சிலர். குறிப்பாக, தாங்களும் தங்கள் உறவுகளும் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல் இது எனது திருச்சபை அல்ல என்று பிரிந்து செல்கின்றனர். ஆனால் திருச்சபை நல்லவை மற்றும் மோசனமானவைகளால் ஆனது என்று கத்தோலிக்கர் நோக்க வேண்டும். திருச்சபையில் ஒரு நிலையில் இருப்பவர்கள் செய்த தவறுகளைச் சரிபண்ணுவதற்குத் திருச்சபை போராடி வருகின்றது. திருச்சபை நம் ஆண்டவரின் வலை. இது நல்ல மீன்களையும் கெட்ட மீன்களையும் கொண்டுள்ளது. எனவே துர்மாதிரிகைகளுடன் வாழக் கற்றுக் கொண்டு திருச்சபை என்ற பெரிய வலையிலிருந்து துர்மாதிரிகைகளுக்கு எதிராக உழைக்க வேண்டும்.
இவ்வாறு விமானப் பயணத்தில் நிருபர்களுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இத்தாலி, ஆஸ்ட்ரியா, செக் குடியரசு ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்கு அனுப்பிய செய்தியில், இத்தாலிக்கு ஒழுக்கரீதியான புதுப்பித்தல் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நேயர்களே, ஜெர்மனியில் கடந்த ஆண்டில் மட்டும் 1,81,000 கத்தோலிக்கர் திருச்சபையிலிருந்து விலகியுள்ளனர். கடவுள் எங்கே இருக்கின்றாரோ அங்கே எதிர்காலம் இருக்கிறது என்ற தலைப்பில் நடைபெறும் திருத்தந்தையின் இப்பயண நிகழ்வுகளை ஜெர்மானியர்களும் நிமிடத்துக்கு நிமிடம் தொலைக்காட்சியில் மிகக் கவனமாகக் கவனித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஜெர்மன் மக்கள் விசுவாசத்தில் ஆழமாக வேரூன்ற இப்பயணம் உதவட்டும் எனச் செபிப்போம். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு ஜெர்மன் நாட்டவரைத் திருச்சபை திருத்தந்தையாகப் பெற்றிருப்பதில் அந்நாட்டினர் உண்மையிலேயே மகிழ்வார்களாக.








All the contents on this site are copyrighted ©.