2011-09-22 16:58:36

செப்டம்பர் 23 வாழ்ந்தவர் வழியில்.... அகஸ்டஸ்


முதல் உரோமைப் பேரரசர் என நோக்கப்படும் அகஸ்டஸ் சீசர் கிமு 63ம் ஆண்டு, செப்டம்பர் 23ம் தேதி பிறந்தார். இவர் கி.மு. 27ம் ஆண்டு முதல் கி.பி. 14ம் ஆண்டு வரை, அதாவது தனது மரணம் வரை உரோமைப் பேரரசை ஆட்சி செய்தவர். உரோமானியப் பேரரசை நிறுவிய அகஸ்டஸ் சீசர், வரலாற்றில் முக்கியமானவர்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார். இப்பேரரசின் அரசைச் செம்மையாகச் சீரமைத்து இரு நூற்றாண்டு காலம் உள்நாட்டு அமைதியோடும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு அடிகோலினார். காயுஸ் ஒக்தாவியுஸ் துரினுஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது தாத்தா காயுஸ் ஜூலியஸ் சீசர், கிமு 44ம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர், கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்தாவியுஸ் என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டார். கி.மு.27ம் ஆண்டில் உரோமன் செனட் அவை இவரை “அகஸ்டஸ்” அதாவது “மரியாதைக்குரியவர்” என்று அழைத்துப் பெருமைப்படுத்தியது. அதன் பின்னர் இவரது பெயர் காயுஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் என மாறியது. எனினும் இதே பெயரில் பலர் இருப்பதால் இவர் பொதுவாக ஒக்தாவியுஸ் என அழைக்கப்பட்டார். கிமு 63 முதல் 44 கி.மு. வரை நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது இவர் ஒக்டேவியஸ் எனவும், கிமு 44 முதல் 27 வரை நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது ஒக்தாவியன் எனவும், கி.மு.27ம் ஆண்டுக்குப் பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அகஸ்டஸ் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறார். அகஸ்டசின் அதிகார வளர்ச்சிக்குப் பின்னணியில், நிதிநிலை வளர்ச்சி, பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம் கிடைத்த வளங்கள், படைவீரர்களின் விசுவாசம், மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன. அகஸ்டஸ் கி.பி.14ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.