2011-09-21 16:09:02

செப்டம்பர் 22, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........, மைக்கேல் ஃபாரடே


தெற்கு இலண்டனுக்கு அருகாமையிலுள்ள Newington Butts என்னுமிடத்தில் 1791ம் ஆண்டு செப்டம்பர் 22ல் பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப்பட்ட நிலையில் இருந்தது. ஃபாரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜார்ஜ் ரீபோ (George Riebau) என்பவருக்குக் கீழ் தனது 14 ஆவது வயதில் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.
இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, ஃபாரடே அனுப்பினார். சந்தர்ப்பம் வரும்போது ஃபாரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் ஃபாரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ராயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, ஃபாரடேக்குப் பெற்றுக்கொடுத்தார்.
டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ் (Jane Apreece), ஃபாரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந்துன்பமடைந்த ஃபாரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே ஃபாரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.
மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ள இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.
வேதியியலாளரும், இயற்பியலாளருமான ஃபாரடே, 1867ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.