2011-09-20 16:10:15

விவிலியத்தேடல் - கண்ணின் மணிபோல் காக்கும் கடவுள் - திருப்பாடல் 77


செப்.20,2011 RealAudioMP3 . “என் துன்ப நாளில் என் கடவுளை நாடினேன். இரவில் அயராது கைகூப்பினேன். ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை. கடவுளை நினைத்தேன். பெருமூச்சு விட்டேன். அவரைப்பற்றி சிந்தித்தேன். என் மனம் சோர்வுற்றது. கடவுளே, என் கண் இமைகள் மூடாதபடிச் செய்துவிட்டீர். நான் கலக்கமுற்றிருக்கிறேன். என்னால் பேச இயலவில்லை”..... (தி.பா.77)
அன்பு நேயர்களே, கடவுள் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக உணர்ந்த நேரங்கள் உண்டா? கடவுள் உங்களைக் கைவிட்டு விட்டதாக உணர்ந்த நாட்கள் உண்டா? கடவுள் எனக்கு உதவி செய்யாமல் மௌனம் காக்கிறாரே, என் வேண்டுதல் கேட்கப்படவில்லையே, எனது கஷ்டங்கள் தீரவில்லையே என்று அழுது மடிந்த நேரங்கள் உண்டா? இந்த மாதிரி நேரங்கள் பலருக்கு இல்லாமல் இருக்காது. எல்லார் வாழ்க்கையிலும் எப்போதாவது இருளான நேரங்கள் வருவதுண்டு. நம் நேயர் ஒருவர் எமக்கு எழுதிய கடிதத்தில், “கடவுளிடம் இத்தனை ஆண்டுகளாகச் செபிக்கிறேன், ஆனால் அவர் இன்னும் என் வேண்டுதலைக் கேட்கவில்லை” என்று எழுதியிருந்தார். அருளாளர் அன்னை தெரேசாகூட இருளான நேரங்களை அனுபவித்திருக்கிறார். திருச்சபையின் மறைவல்லுனர் என அழைக்கப்படும் புனிதை அவிலா தெரேசாவும் ஒரு கட்டத்தில் கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக உணர்ந்தார். அச்சமயத்தில் அவர் செபிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், கல்வாரியில் சிலுவையில் தொங்கிய போது, “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” என்று உரக்கக் கத்தினார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம்.
திருப்பாடல் 77ன் சில புலம்பல் செப வரிகளைத்தான் நாம் தொடக்கத்தில் கேட்டோம். சென்ற வாரத்திலும் இதையொத்த புலம்பல் செபத்தைக் கேட்டோம். ஆயினும் திருப்பாடல் 77ல் ஆசிரியர் ஆசாப், கொஞ்சம் வித்தியாசமாகச் செபிக்கிறார். அன்று இஸ்ரயேல் மக்கள், வேற்று நாட்டவரான பபிலோனியாவில் அடிமைகளாக இருந்து தங்கள் நாடு திரும்பிய பின்னர் மறுபடியும் அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்து கொண்டன. எனவே அதை நினைத்து ஆசாப்....
“என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ? அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? அவரது வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ? கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?.....”
இப்படிச் செபிக்கும் பாடல் ஆசிரியர், நிகழ்காலத்தில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மத்தியிலும், முந்தைய காலத்தில் இறைவன் தங்கள் இனத்திற்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் 400 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைகளாக வாழ்ந்து பின்னர் மோசே தலைமையில் வெளியேறிய போது அவர்கள் அற்புதமாய்ச் செங்கடலைக் கடந்தது, எகிப்திய மன்னரின் படைகள் கடலில் மூழ்கியது, இப்படி இறைவன் செய்த நன்மைகளை, ஒவ்வொன்றாக இத்திருப்பாடலில் தியானிக்கின்றார் (தி.பா.77:11-20)
“ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன். முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது. ஆழ்கடல்களும் கலக்கமுற்றன. கார்முகில்கள் மழை பொழிந்தன. மேகங்கள் இடிமுழங்கின. கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர். மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்”
கடந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்திய ஆண்டவர், எதிர்காலத்திலும் நன்மை செய்வார் என்று இந்தத் திருப்பாடலில் ஆசிரியர் செபித்து ஆறுதல் அடைகிறார். ஆண்டவரின் அளவில்லாத ஆற்றலை நினைத்துப் பார்க்கிறார்.
“கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை…” (தி.பா.77 : 13-14, 19)
செஸ் விளையாட்டு மாஸ்டர் அனத்தோலி ஷரான்ஸ்கி (Anatoly Sharansky) என்பவர் முன்னாள் சோவியத் யூனியன் ஆட்சியில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவர் விவிலியத்திலுள்ள 150 திருப்பாடல்களையும் வாசித்துத் தியானித்தார். பின்னர் ஷரான்ஸ்கி இதனால் தான் அடைந்த பலன் என்ன? என எழுதுகிறார்.
“எனது பெரிய இழப்புகளும் துயரங்களும்கலந்த உணர்வுகள் பெரும் நம்பிக்கைகளாக மாறின. உண்மையானத் தீமைகளுக்கு மத்தியில் மனிதர் கடவுளை நம்புவதற்கு எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைத் திருப்பாடல்கள் எனக்குக் காட்டின. இருளின் சோகமான, தீமையான இடத்திலும் மக்கள் எவ்வாறு நல்ல நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டார்கள் என்பதை அறியவும் படைத்தவராம் இறைவனிடம் மீண்டும் நான் நம்பிக்கை கொள்ளவும் இப்பாடல்கள் உதவின. கடந்த காலத்தில் கடவுள் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க வைத்தன”.
அன்பர்களே, நாமும் துன்பங்களில், துயருறும் போது நமது கடந்த கால வாழ்க்கையைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. கடவுள் நம் வாழ்க்கையில் நம்மோடு நடந்து வந்த அவரது அடிச்சுவடுகள் நம் கண்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இஸ்ரயேல் மக்களை மோசே, ஆரோன் போன்ற தலைவர்களால் வழிநடத்தியது போல நம்மையும், நல்ல பெற்றோர், நல்ல நண்பர்கள், நல்ல உறவுகள், நல்ல வேலை இப்படி பலர் வழியாக வழி நடத்தியிருக்கிறார். வழிநடத்தியும் வருகிறார். நான் ஊசி முனையில் உயிர் பிழைத்தேன், அந்த ஆண்டவன்தான் என்னைக் காப்பாற்றினான் என்று எத்தனைபேர் சொல்கிறார்கள்! நான் மரணத்தின் விளிம்பைத் தொட்டு வந்தவன், நான் இன்று உயிரோடு இருப்பது தெய்வம் போட்ட பிச்சை என்று எத்தனைபேர் நன்றியோடு சொல்கிறார்கள்! ஏதோ ஓர் உன்னத சக்தி என்னை வழிநடத்துகின்றது என உணர்ந்த நாட்கள், நேரங்கள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்டது இல்லையா? எனவே துன்ப நேரங்களில் நாம் தனியாக இல்லை, அவ்வேளைகளில் கடவுள் நம்மைக் கண்ணின் மணிபோல் காத்து வருகிறார் என்ற நம்பிக்கை நம்மில் பிறக்க வேண்டும். துயர நேரத்தில் கடவுள் கைவிட்டுவிட்டதாக உணரலாம். ஆனால் அந்த நேரங்களில் எத்தனை பேரின் ஆறுதலான வார்த்தைகள், பிறரன்பு உதவிகள் கிடைக்கின்றன. நாம் கடவுளிடம் கேட்டது கிடைக்காமல் இருக்கலாம். அதேசமயம் நாம் கேட்டது கிடைத்து அதனால் தீமை விளைந்தால் யாரை நொந்து கொள்வது?, கடவுளே எனக்கு இந்த வரம் இப்போதைக்கு வேண்டாம், தேவைப்படும் போது கொடும் என்று திருப்பிக் கொடுக்க முடியுமா?. கடவுளிடம் வரம் கேட்டு தனது இரண்டு கண்களிலும் பார்வையைப் பறிகொடுத்த பக்தன் பற்றிய கதையை நாம் கேட்டிருக்கிறோம்.
“கடவுளுக்கு ஆலோசனை சொல்ல நான் யார், எனக்கு நல்லது எது என்று என்னைவிட அவருக்கு நன்றாகவே தெரியும்” என்று சொல்லிப் பாருங்களேன். மகிழ்ச்சியாக இருந்த நேரங்களை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்து அதில் வாழ வேண்டுமென்று சொல்வார்கள். துன்பங்களையே நினைத்து அதிலே வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாமல் இன்ப நிகழ்வுகளை நினைக்க வேண்டும் என்பார்கள். அந்த மகிழ்ச்சியான நேரங்களை அருளியது இறைவன் அல்லவா?.
ஒரு மனிதர் புத்தருக்குக் காணிக்கை கொடுப்பதற்காக இரண்டு கைகள் நிறைய மலர்களை ஏந்திக் கொண்டு அவரிடம் சென்றார். அவரைப் பார்த்த புத்தர், “அவற்றைப் போடு” என்றார். வந்தவருக்கு புத்தரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஒருவேளை இடது கையிலும் பூக்கள் இருப்பதால் அது மரியாதைக் குறைவு என்று நினைத்து அவற்றைக் கீழே போடச் சொல்கிறாரோ என்று யோசித்து இடது கையிலிருந்த மலர்களைக் கீழே போட்டார் அவர். புத்தர் மீண்டும், “அவற்றைப் போடு” என்றார். அப்பொழுது, தான் வைத்திருந்த எல்லா மலர்களையும் கீழே போட்டுவிட்டு வெறுங்கையோடு புத்தர் முன்னர் கலக்கத்தோடு நின்றார் அவர். புத்தர் மீண்டும், “அதனைப் போடு” என்றார். சென்றவருக்கு ஒரே குழப்பம். நான் எதைக் கீழே போட வேண்டும் என்று கேட்டார். அதற்கு புத்தர் புன்சிரிப்புடன், “மகனே, மலர்களை அல்ல, அந்த மலர்களைக் கொண்டு வந்த ஆளைக் கீழே போடு” என்று சொன்னார். அன்பு நேயர்களே, நாமும் இப்படித்தான் கடவுளிடம் செபிக்கும் போது கடவுள் பற்றிய நமது எண்ணத்தை, எதிர்பார்ப்பை விட்டுவிட்டு வெறுங்கையோடு அவர்முன் அமர வேண்டும். அவர் எனக்கு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களைக் கீழே போட்டுவிட்டு அவர்முன் மண்டியிட வேண்டும். இல்லாவிட்டால் அவரிடம் நமது புலம்பல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
தாமஸ் மெர்ட்டன் சொன்னார் : “எனது வாழ்வு புதிரானது. அதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அந்த இருள்சூழ்ந்த இரவில் நான் ஒரு கரத்தால் வழிநடத்தப்படுகிறேன். ஆனாலும் என்னை வழிநடத்தும் அந்தக் கரத்தின் அன்பிலும் பாதுகாப்பிலும் நான் முழுவதும் சார்ந்து இருக்கிறேன்” என்று. ஆம். அன்பர்களே, இயேசு சொல்கிறார் : “அஞ்சாதீர்கள். நான் என்றும் உங்களோடு இருக்கிறேன்” என்று. அந்த இறைவன் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதோ, அகலுவதோ கிடையாது.








All the contents on this site are copyrighted ©.