2011-09-20 16:11:44

திருத்தந்தை, வானியல் நிபுணர் குழு சந்திப்பு


செப்.20,2011. இவ்வியாழன் முதல் ஞாயிறு வரை ஜெர்மனி நாட்டுக்குத் தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தில், தனியாள் மற்றும் சமூக வாழ்க்கையில் இறைப்பிரசன்னத்தை மீண்டும் கண்டுணருவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 22 முதல் 25 வரை திருத்தந்தை தான் மேற்கொள்ளும் ஜெர்மனிக்கானத் திருப்பயணத்தையொட்டி வழங்கிய ஒலி-ஒளிச் செய்தியில், பாப்பிறை என்ற முறையில் தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் இந்த மூன்றாவது திருப்பயணத்தைத் தான் ஆவலோடு எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கின்றது” என்ற இத்திருப்பயணத்தின் கருப்பொருளை மையமாக வைத்தும் அச்செய்தியை அவர் வழங்கியுள்ளார்.
கடவுளின் இருப்பை அறிவியல்ரீதியாக நிரூபிக்க இயலாது எனினும், படைப்பின் அழகு, திருமறை நூல், மக்களைச் சந்திப்பது போன்ற பல வழிகளில் மக்கள் கடவுளின் இருப்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தி ஜெர்மனி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் வானியல் நிபுணர் குழு ஒன்றை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை.
இரண்டு இத்தாலியர்கள் உள்ளிட்ட இந்த 9 நிபுணர்கள் விண்வெளியில் இருந்த போது இவர்களுடன் கடந்த மே 21ம் தேதி வீடியோச் செய்தி மூலம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.