2011-09-20 16:08:19

செப்டம்பர் 21, வாழ்ந்தவர் வழியில்... ஹெச். ஜி. வெல்ஸ்


1866ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிறந்தவர் ஆங்கில எழுத்தாளரான ஹெச். ஜி. வெல்ஸ் (H. G. Wells). சமகாலத்திய நாவல்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும், அறிவியல் புனைக்கதைளாலேயே இவர் அதிகம் அறியப்படுகிறார். ஹெச்.ஜி வெல்ஸ் அறிவியல் புனைக்கதை இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். சமதர்மவாதியாகிய இவர் பொதுவாக அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவை மாற்றிக் கொண்டார். இவரது பிற்காலத்திய எழுத்துக்களில் அரசியல் கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிவியல் புனைக்கதைப் படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தரவர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விடயங்களைப் பற்றி நாவல்களை எழுதினார். மரபியல் சோதனைகள், வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணுஆயுதப் போர் போன்ற பிரபல அறிவியல் புனைக்கதைப் பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்ஸ். இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட இராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளைக் கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள், அவருக்குப் பின்வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. The Time Machine, The Invisible Man, The Island of Doctor Moreau, The War of the Worlds, The First Men in the Moon, The Shape of Things to Come போன்றவை இவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகளாகும்.








All the contents on this site are copyrighted ©.