2011-09-20 16:15:51

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்திற்கு இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் ஆதரவு


செப்.20,2011. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவேளை, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வாணையச் செயலர் அருட்பணி சார்லஸ் இருதயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இப்போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னரே 500க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணையத் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அடிக்கடிப் பார்வையிட்டு தனது ஆதரவைத் தெரிவித்து வருவதாகவும் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைகளும், காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உட்பட சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படவும் இவ்வாணையம் அரசை விண்ணப்பித்துள்ளது.
2004ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள், கூடங்குளம் இப்புதிய அணுமின் நிலையத்தால் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது என்றும் இவ்வாணையத்தின் அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், இப்பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக சேவகி மேதா பட்கர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.