2011-09-20 16:23:18

இந்தியர்களிடம் உடல் உழைப்புக் குறைவு


செப்.20,2011. நோய்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்குத் தேவையான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 29 விழுக்காடு என்ற அதிர்ச்சித் தகவலை ஓர் ஆய்வு வெளியிட்டுள்ளது.
தொற்றிக் கொள்ளாத நோய்கள் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முதலாவது உச்சி மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக இந்திய பொது சுகாதார அமைப்பு சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 29 விழுக்காட்டினர் உடற்பயிற்சி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை, அதில் ஈடுபடவும் இல்லை என அவ்வாய்வு கூறுகிறது.
இந்த விடயத்தில் ஆண்களைவிட பெண்கள் மேலும் மோசமான நிலையில் உள்ளனர் எனவும், உடல் உழைப்பு இல்லாத பெண்களின் எண்ணிக்கை 34 விழுக்காடு, அதாவது, 3ல் ஒரு பெண் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாரத்தில் சராசரியாக 149 நிமிடங்கள் உடல் உழைப்பு அவசியம் என்ற அளவுகோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது.
உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் இல்லாததால் நகரங்களில் 6.6 முதல் 12.7 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தியாவில் 5.1 கோடிப் பேர் நீரழிவு நோயாளிகள். 2025ல் இது 8.7 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. இந்திய நோயாளிகளில் 8.5% பேர் மனநோய் பாதித்தவர்கள் என்று அவ்வாய்வு தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.