2011-09-19 15:52:19

வாரம் ஓர் அலசல் – அனைத்துலக அமைதி நாள் (செப்.21)


செப்.19,2011. இன்றைக்கு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீனக் கவிஞர் ஒருவர் எழுதுகிறார் ....
“விண்மீன்களும் கிரகங்களும் உயரத்தில் கொலு வீற்றிருக்கின்றன. மில்கி வே (Milky Way) என்ற பால்வீதி தெரிகிறது. ஆனால் அது பால் தருவதில்லை. கண்ணாடியைப் போல இருக்கிறது நிலா. ஆனால் அதில் முகம் பார்க்க முடியாது. ஒரு விண்மீனின் பெயர் ‘நெய்யும் பெண்’. ஆனால் அவளோ எதையும் நெய்ததில்லை. ஒரு விண்மீன் கூட்டத்தின் பெயர் ‘எருது’. ஆனால் அதை வண்டியில் பூட்ட முடியாது. கிழக்கில் தெரியும் விண்மீன் ‘புடைக்கும் முறம்’. ஆனால் அது தானியங்களைப் புடைக்க உதவாது. இன்னொரு விண்மீனின் பெயர் ‘அகப்பை’. ஆனால் அதனால் திராட்சை இரசத்தை முகக்க முடியாது. ஒவ்வொரு விண்மீனுக்கும் ஒரு பெயர் இருக்கின்றது. ஆனால் ஒன்றாவது அதன் பெயருக்கு ஏற்றாற்போல் நடப்பதில்லை. அவை வெறும் பெயர்கள்தான். வானத்திலுமா இப்படி....?”
என்று அந்த சீனக் கவிஞர் பெருமூச்சு விடுகிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் நிலைமை அப்படி இருந்ததாக அவரது கவிதை வரிகளில் வெளிப்படுகின்றது. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதற்காகவே அதிகாரிகளுக்கு “வானளாவ அதிகாரம்” தரப்படுகின்றது. ஆனால் பெரிய பெரிய அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கும் இவர்கள் தங்கள் பதவிகளின் பெயருக்கு ஏற்ப நடப்பதில்லை என்று அந்தக் கவிஞர் ஆதங்கப்படுகிறார். இந்தக் கவிதைக்கு விமர்சனம் எழுதிய அப்துல் ரகுமான், “அரசு அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள், மேகங்களிலிருந்து காய்ந்து போன வயல்களுக்கு மழையைக் கொண்டு வருவதில்லை. மாறாக, வானத்து விண்மீன்களைப் பொறுக்கித் தங்கள் இருப்புப் பெட்டிகளில் சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். அதிகாரம் என்பது ஒற்றடைக் கோல். அது சிலந்தி வலைகளை அழிப்பதற்கானது. ஆனால், அவர்கள் கையிலோ அது கன்னக்கோல் ஆகி விடுகிறது. யாரைக் காப்பதற்காக அவர்கள் அமர்த்தப்பட்டார்களோ அந்த மக்களிடமே அவர்கள் திருடுகிறார்கள்” என்கிறார். அந்தச் சீனக் கவிஞர் மேலும் எழுதுகிறார்......
“எங்கள் தறி நாடாக்களும் நூற்கண்டுகளும் நிர்வாணமாக இருக்கின்றன. எங்கள் நாட்டில் துணி நெய்பவனுக்கு உடுத்த ஆடை இல்லை. தானியங்கள் உற்பத்தி செய்பவனுக்கு உண்ண உணவில்லை. வீடுகளைக் கட்டித் தருவோனுக்கு ஒதுங்க இடமில்லை……”
அந்தக் கவிஞர் வாழ்ந்த காலத்துச் சீனாவின் நிலைமை இன்றும் எத்தனையோ நாடுகளில் காணப்படுகின்றது. இலங்கையில் போர்க் காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை அரசு மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பதாகத் தகவல்கள் இஞ்ஞாயிறன்று வெளியாயின. அதேநேரம், இலங்கை அரசு அண்மைக் காலமாக கிறிஸ் பூதம் என்ற மர்ம மனிதன் பீதியைத் தமிழ் மக்கள் மீது திணித்து அதன் மூலம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கிறது என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனிவாவில் இத்திங்கட்கிழமை புலம்பெயர் தமிழர்கள் பொங்கு தமிழ் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தின் நோக்கமே, தங்களது தாயகத்தில் சொந்தங்கள் வாழும் பரிதாப நிலைகளை சர்வதேச சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்வதுதான் என்று ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் விளக்குகின்றார்.
இலங்கைக் கவிஞர் காசியானந்தனும் பொங்கி வெடிக்கிறார்
இந்தியாவின் பாதுகாப்பு பற்றி டெல்லியில் நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. எல்லைப் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. அவை நாட்டுக்குப் புதிய பயங்கரவாதக் குழுக்களை அனுப்பி மாபெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கிடையே, காஷ்மீரின் லடாக் பகுதியின் லே மாவட்டத்தில் சீன இராணுவத்தினர் இந்திய இராணுவத்தின் பதுங்குக் குழிகள் மற்றும் கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற இந்த அத்துமீறிய ஊடுருவல் இப்போதுதான் வெளியே கசிந்துள்ளது. லிபியாவில் தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்த போதிலும் கடாஃபி ஆதரவாளர்கள் இன்னும் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. Bani Walid என்ற நகரில் தாக்குதல்களை அவர்கள் தொடங்கியிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஐரோப்பிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலைமை உருவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
உலகில் பல நாடுகளின் நிலைமை இப்படியிருக்க, இந்த நாடுகளின் மக்கள் தங்களது சனநாயக உரிமைகளுக்காகவும் நாட்டில் அமைதி ஏற்படவும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் நிறுவனமும் செப்டம்பர் 21 ஐ உலக அமைதி நாளாகக் கடைபிடித்து வருகிறது. 1981ம் ஆண்டு ஐ.நா.பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், மூன்றாவது செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 லிருந்து ஆண்டுதோறும் இவ்வுலக நாள் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அமைதிக்காக உழைத்து உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அதேசமயம் அமைதி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு இப்புதன்கிழமை இடம் பெறும் இந்த உலக அமைதி தினம், “சமாதானமும் சனநாயகமும் : உங்கள் குரலைக் கேட்கும்படிச் செய்யுங்கள்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சனநாயக நாட்டில் அமைதி எப்போது பிறக்கும்?
அந்தப் பாட்டி கம்பளி நூலால் பின்னல் வேலைகள் செய்வதில் மிகவும் திறமை பெற்றவர். பாட்டி அதற்காக, கம்பளி நூலையும் ஒரு பின்னல் ஊசியையும் எப்போதும் வைத்திருந்தார். ஒரு நாள் அந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்தார். ஆனால் அங்கே யாருமே இல்லை. வெகு நேரம் சுற்றியலைந்ததால் அவருக்குக் கால் வலித்தது. எனவே ஓரிடத்தில் அமர்ந்தார். காலுக்கு ஒரு ஜோடி செருப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே தன்னிடமிருந்த கம்பளி நூலால் பின்னி அழகான ஒரு ஜோடி செருப்பை உருவாக்கினார். பின்னர் அழகான பாய், கட்டில், அழகான வீடு, வீட்டில் கொஞ்சி விளையாடக் குழந்தைகள், குழந்தைகளுக்கு ஊஞ்சல்கள் என ஒவ்வொன்றாக கம்பளி நூலால் உருவாக்கினார். பின்னர் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குச் சென்றார். இந்த நூல் குழந்தைகளை யாராவது பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்களா? என்று ஆசிரியர்கள் கேவலமாகச் சொன்னதும், பாட்டிக்கு படு கோபம் வந்தது. உடனே பாட்டி ஊசியையும் நூலையும் எடுத்து சட்டென்று பின்னி, ஓர் அழகான கார் செய்தார். தன் பேரக் குழந்தைகளை அதில் ஏற்றிக்கொண்டு நியாயம் கேட்பதற்காக நகரத் தலைவரிடம் சென்றார். பாட்டி அளித்த புகாரின் பேரில் நகரசபை கூடி விவாதித்தது. "நம் நகரம் மிகவும் புகழ் பெற்ற நகரம். எனவே இந்த நகரத்துப் பள்ளியில் கம்பளி நூலால் செய்யப்பட்ட குழந்தைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது'' என்று தலைவர் இறுதியாகத் தீர்ப்புச் சொன்னார். பாட்டிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அடுத்த நிமிடமே ஊசி நூலெடுத்துப் பின்னி ஒரு விமானம் செய்தார். அந்த விமானத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த நாட்டு அரசுத் தலைவரிடம் முறையிடப் பறந்து சென்றார். ஊசி நூலால் பின்னி உருவாக்கப்பட்ட கம்பளிக் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கக் கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை'' என்ற பதில் அங்கிருந்தும் வந்தது. ஆனால் அரசு அதிகாரிகளோ, பாட்டியின் கைவேலைப்பாடுகளை வைத்து கண்காட்சி நடத்திப் பணம் திரட்டத் துரிதமாய்த் திட்டமிட்டார்கள். இதனால் கோபமடைந்த பாட்டியோ, "என் பேரக் குழந்தைகள் படிப்பதற்கு இடம் தராதவர்கள், இப்போது எங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்களே' என்று தன் வீட்டின் ஒரு நூலைப் பிடித்து இழுத்தார். உடனே வீடு நூல் நூலாகப் பிரிந்து தரைமட்டமாகியது. இதேபோல் தான் உருவாக்கிய மரம் செடி கொடிகள், பேரக் குழந்தைகள், புத்தகங்கள் என அருமையான அனைத்துக் கம்பளிப் பொருட்களையும் பிரித்து அழித்தார்.
பிறகு பாட்டி, இரக்கமுள்ள நல்லவர்கள் வாழும் ஒரு நாட்டைத் தேடிப் புறப்பட்டார். அப்படிப்பட்ட ஒரு நாட்டை அவர்கள் விரைவிலேயே கண்டுபிடிப்பார். அங்கே மறுபடியும் தன் ஊசியில் நூல் கோர்த்து அழகும் அறிவுமுள்ள தன் பேரக் குழந்தைகளை மீண்டும் உருவாக்குவார். அனைவரும் அவரை அன்புடன் நேசிப்பார்கள். அப்போது பாட்டி பழைய கோபமெல்லாவற்றையும் மறந்து புன்னகைப்பார். பிறகு அவர்கள் எந்தக் கவலையுமின்றி மீண்டும் மீண்டும் பின்னி, அதிசயங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்.
அன்பர்களே, இது ஒரு ஹீப்ரு மொழிக் கதை. இந்தப் பாட்டி போன்று ஒவ்வொரு குடிமகனும் எந்தக் கவலையுமின்றி வாழும் ஒரு சனநாயகத்தில்தான் அமைதி இருக்கும். “இறுக்கி பிணைக்கப்பட்ட கைகளைக் கொண்டு அடுத்தவர் கையைக் குலுக்க முடியாது” என்றார் மகாத்மா காந்தி. “நாம் ஒருவர் ஒருவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை மறப்பதாலே அமைதி ஏற்படுவதில்லை” என்றார் அருளாளர் அன்னை தெரேசா. “அமைதி வேண்டுமா, அதை உன் நண்பர்களிடம் பேசாதே, ஆனால் உன் எதிரிகளிடம் அதைப்பற்றிப்பேசு” என்றார் Moshe Dayan. Seymour Miller மற்றும் Jill Jackson சொன்னது போல, வீட்டிலும் நாட்டிலும் அமைதியை விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அந்த அமைதியை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம். அமைதியில் வாழும் இதயமே பிறரையும் அமைதியில் வாழ விடும். தன் இதயத்தில் அமைதியை அனுபவிக்கும் இதயமே, பிறரும் அந்த அமைதியை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடையும்.








All the contents on this site are copyrighted ©.