2011-09-19 15:19:12

புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், செபங்கள் மிக அதிக அளவில் தேவை - எருசலேம் துணை ஆயர்


செப்.19,2011. புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், அரசியல் செயல்பாடுகள் மட்டும் போதாது, அதைவிட செபங்கள் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன என்று புனித பூமியில் உள்ள ஓர் ஆயர் கூறினார்.
பாலஸ்தீனத்தைத் தனியொரு நாடாக ஐ.நா.அவை அங்கீகரிக்க வேண்டுமென்ற முயற்சியில் பாலஸ்தீனிய அதிகாரிகள் ஈபட்டிருக்கும் இவ்வேளையில், அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமும், வன்முறைகளும் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டி பேசிய எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி (William Shomali), அப்பகுதியில் அமைதி நிலவ செபிக்கும்படி மக்களுக்கு விடுத்த ஒரு செய்தியில் இவ்வாறு கூறினார்.
ஐ.நா. அவையில் பாலஸ்தீனம் ஒரு பார்வையாளர் நிலையைப் பெறுவதற்கு பாலஸ்தீனிய அதிகாரிகள் இந்த வாரம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பாலஸ்தீனிய அதிகார அமைப்பின் தலைவர் Mahmoud Abbas செப்டம்பர் 23, இவ்வாரம் வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் இக்கோரிக்கையை முன்வைத்து உரையாற்ற உள்ளார். இந்த முயற்சி குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட நாட்களிலிருந்து மேற்கு கரை பகுதியில் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன.
அமைதியை வழங்கும் எந்த மாற்றத்தையும் மக்கள் விரும்புகின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறிய துணை ஆயர் வில்லியம் ஷொமாலி, வன்முறைகளால் புனித பூமியை விட்டு வெளியேறியுள்ள அனைத்து மக்களையும் மீண்டும் புனித பூமிக்கு வரும்படி கோரி, ஓர் அழைப்பையும் முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.