2011-09-19 15:17:45

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரை


செப்.19,2011. கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வின் மூலம் வாழ்ந்துகாட்டும் குடும்பங்கள் திருச்சபையின் புதிய மறைபரப்புப் பணியின் முக்கியக் கருவிகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியபோது, ஞாயிறு திருப்பலியின் வாசகங்களில் ஒன்றான புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்தின் வரிகளை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த புனித பவுல் 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே' என்று சொன்னதுபோல், இன்று உலகில் வாழும் பலர் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
புதிய மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், இறைவனுக்கும், திருச்சபைக்கும் உழைப்பது மாபெரும் ஒரு சாட்சியாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.