2011-09-19 15:50:19

செப்டம்பர் 20 வாழ்ந்தவர் வழியில்..... அன்னி வூட் பெசண்ட்


அன்னி வூட் பெசண்ட் அம்மையார் (Annie Wood Besant) பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். இவர் இலண்டனில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1847 ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாந்தேதி பிறந்தார். அன்னி பெசண்ட் அம்மையாரின் அரசியல் போக்கு அவரைக் கணவரிடம் இருந்து பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார். 1893 ம் ஆண்டில் பிரம்மஞான சபையின் உறுப்பினராக முதல்முறையாக இந்தியா வந்தார். சென்னை, அடையாறில் பிரம்மஞான சபையின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். அன்னி பெசண்ட் அம்மையார், இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. இந்திய தேசிய காங்கிரசிலும் சேர்ந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். தனது எண்பத்தியோராவது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் அம்மையார், இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜி.கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கியத் தொடர்பை வளர்த்தார். 1937 ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சென்னை, அடையாறில் தனது எண்பத்தேழாம் வயதில் காலமானார் அன்னி பெசண்ட் அம்மையார்.







All the contents on this site are copyrighted ©.