2011-09-19 15:20:02

உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலக நிறுவனங்களின் சக்திக்கு அரசுகள் பணிந்து போகக்கூடாது - ஐ.நா.வின் உயர் அதிகாரி


செப்.19,2011. உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலக நிறுவனங்களின் சக்திக்கு அரசுகள் பணிந்து போகாமல், அந்நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் ஐ.நா. நடத்தி வரும் ஒரு உயர்மட்டக் கூட்டத்தையொட்டி, தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள ஐ.நா.உயர் அதிகாரி Olivier De Schutter உணவு நிறுவனங்களுக்கு அரசுகள் இதுவரை அளித்து வந்துள்ள வழிகாட்டும் எச்சரிக்கைகள் தகுந்த பலனைத் தரவில்லை என்று கூறினார்.
உணவு நிறுவனங்கள் உருவாக்கும் அவசர உணவுகள், உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகள் ஆகியவற்றில் உடல் நலனைக் கெடுக்கும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன என்றும், முக்கியமாக, அதிக உடல் எடை கூடும் பிரச்சனைகள் இவ்வுணவால் வருகின்றன என்றும் ஐ.நா. அதிகாரி சுட்டிக் காட்டினார்.
உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகில் 28 இலட்சம் மக்கள் அதிக உடல் பருமனால் இறக்கின்றனர்.
50 நாடுகளின் பிரதமர்களும், 34 நாடுகளின் அரசுத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ள இந்த உயர்மட்டக் கூட்டத்தில், புற்றுநோய், நீரழிவு நோய், இரத்த அழுத்தம் உட்பட உலகின் பல்வேறு நோய்கள் குறித்து பேசப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.