2011-09-19 15:19:48

அமைச்சர் Shahbaz Bhattiஐக் கொன்றவர்களை அரசு காப்பாற்ற முயல்வது தவறு பாகிஸ்தான் ஆயர்


செப்.19,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டது குடும்பப் பகை காரணமாகத்தான் என்று காவல்துறையினர் இரண்டாம் முறையாகக் கூறியிருப்பதற்கு அந்நாட்டு ஆயர் ஒருவர் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் 2ம் தேதி Shahbaz Bhatti அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகுற்றம் தொடர்பாக, இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் முன்பு கிறிஸ்தவர்களாய் இருந்து, பின்னர் இஸ்லாமுக்கு மாறியவர்கள் என்றும், இவர்களுக்கும் Shahbaz Bhatti குடும்பத்தினருக்கும் இடையே சொத்துக்கள் அடிப்படையில் ஏற்பட்ட பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் அண்மையில் கூறினர்.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும், தற்போது இரண்டாவது முறையும் காவல்துறை வெளியிட்டு வரும் இதுபோன்ற அறிக்கைகள் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல் தெரிகிறதென்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
Shahbaz Bhatti கொலையுண்டது ஒரு அமைச்சரின் கொலை மட்டுமல்ல, பாகிஸ்தானில் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மையினரின் குரல் ஒன்றை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்று ஆயர் Anthony சுட்டிக் காட்டினார். ஆயரின் இந்த கருத்தை ஒரு சில இஸ்லாமியத் தலைவர்களும் ஆதரித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.