2011-09-17 15:37:08

பேராயர் தொமாசி : முதியோருக்கு உதவுவதை, ஒருவர் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ள நன்றிக்கடன் என நோக்க வேண்டும்


செப்.17,2011. ஒருவர் முதியோருக்கு உதவுவதைத் தனது தாராளப் பண்பின் வெளிப்பாடாக நோக்காமல், அவர்களுக்குத் தான் பட்டுள்ள நன்றிக்கடனைச் செலுத்துவதாகக் கருத வேண்டுமென்று திருப்பீட அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.
வயதானவர்களின் நலவாழ்வு குறித்து ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் உரையாற்றிய பேராயர் சில்வானோ மரிய தொமாசி, உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கத்தோலிக்கத் திருச்சபை சுமையாக நோக்காமல் அதனை ஓர் ஆசீர்வாதமாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
உலகில் கத்தோலிக்கத் திருச்சபை, வயதானவர்கள், தீராத நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கென 15,448 இல்லங்களை நடத்துகின்றது என்பதையும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி குறிப்பிட்டார்.
2010ம் ஆண்டின் இறுதியில், உலகில் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் சுமார் 76 கோடிப் பேர் இருந்தனர் எனவும் இவ்வெண்ணிக்கை அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு கோடியைத் தாண்டும் எனவும் ஐ.நா.அறிக்கையில் கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பேராயர் தொமாசி, வயதானவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
வாழ்வு என்பது ஒரு கொடை, இதை முடித்துக் கொள்வதற்கு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது, மரணமானது இயற்கையாகவே இடம்பெற வேண்டுமேயொழிய, உயிர்மருத்துவம் அல்லது வேறு வழிகளில் அந்த மரணத்தைத் தழுவ முயற்சிக்கக் கூடாது என்பதைக் கத்தோலிக்கத் திருச்சபை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது என்று அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.